மாணவர்களுக்கு காயர் கிட்: தேசிய தென்னை நார் கூட்டமைப்பு வலியுறுத்தல்
மாணவர்களுக்கு காயர் கிட்: தேசிய தென்னை நார் கூட்டமைப்பு வலியுறுத்தல்
UPDATED : ஆக 19, 2024 12:00 AM
ADDED : ஆக 19, 2024 08:31 AM

பொள்ளாச்சி:
பள்ளி மாணவர்களுக்கேற்ப, காயர் கிட் பாக்ஸ் தயார் செய்யப்பட்டுள்ளது. இதை அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு உதவினால், விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படும் என, தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் தெரிவித்தார்.
தமிழகத்தில், தென்னை நார் தொழிற்சாலைகள் அதிகளவு செயல்படுகின்றன. தென்னை நார் தற்போது, மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக தயாரித்து ஏற்றுமதி செய்ய உற்பத்தியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி மாணவர்களிடம், விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், காயர் கிட் பாக்ஸ் தயார் செய்யப்பட்டுள்ளது.
அந்த கிட்டில், ஸ்மார்ட் அக்ரிகல்ச்சர் ஒர்க் ஷீட் உள்ளது. அதில், உங்களுக்கு தெரிந்த ஐந்து விதை படங்கள், ஐந்து மர இலைகள், மண்ணின் வண்ணம் குறித்து எழுதவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மண்ணில்லா விவசாயத்தில் மர விதை வளர்ப்பு முறை குறித்தும் விளக்கப்பட்டது.
இது குறித்து தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது:
உலக நாடுகளிடையே பருவநிலை மாற்றம் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சூழலில், 36 நாடுகள் மிகப்பெரிய வறட்சியாலும், 14 நாடுகள் அதிக மழைப்பொழிவாலும் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது, மண்ணில்லா விவசாயம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் குழந்தைகளுக்கு, மண்ணில்லா விவசாயம் கற்கப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், வகுப்பறைகளில் மண்ணில்லா விவசாயம் பற்றிய கற்றுக்கொடுக்கப்படுகிறது.
தற்போது, தமிழகத்தில் முதல் வகுப்பில் இருந்து கல்லுாரி வரை ஒவ்வொரு வகுப்புக்கும் தகுந்தவாறு, குழந்தைகளுக்கு, காயர் கிட் வடிவமைக்கப்பட்டு, மண்ணில்லா விவசாயத்தை புகுத்த இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன் வாயிலாக, அதிகளவு அறுவடை கிடைப்பதுடன், உரச்செலவு குறையும். அதை பற்றிய புரிதல், பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே உருவாக்க இந்த கிட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கிட்டில், தென்னை நாரால் தயாரிக்கப்பட்ட நார் குடுவை, தென்னை நார் துகள்கள், மரம், செடிகள், நாட்டு விதைகள் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, காயர் கிட்டை வாங்கி, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கலாம். இதனால், மண்ணில்லா விவசாயம் மற்றும் விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும்.
இவ்வாறு கூறினார்.