செமஸ்டர் தேர்வு நடைமுறையில் கல்லுாரி நிர்வாகம் தலையிடக் கூடாது; கல்வியியல் பல்கலை எச்சரிக்கை
செமஸ்டர் தேர்வு நடைமுறையில் கல்லுாரி நிர்வாகம் தலையிடக் கூடாது; கல்வியியல் பல்கலை எச்சரிக்கை
UPDATED : ஜூலை 13, 2026 03:25 PM
ADDED : ஜூலை 13, 2026 03:27 PM

சென்னை:
'மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நடைமுறைகளில், கல்லுாரி நிர்வாகத்தின் தலையீடு இருக்க கூடாது' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், மாநிலம் முழுதும், 500க்கும் அதிகமான கல்வியியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் படிக்கும், பி.எட்., மாணவ, மாணவியருக்கான செமஸ்டர் தேர்வுகள், 111 மையங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில், செமஸ்டர் தேர்வு நடைமுறைகளில், கல்வியியல் கல்லுாரி நிர்வாகத்தினர் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது குறித்து, அனைத்து கல்வியியல் கல்லுாரி முதல்வர்களுக்கும், பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கண்மணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
செமஸ்டர் தேர்வு முதன்மை கண்காணிப்பாளர்களிடம் இருந்து, பல்கலைக்கு சில புகார்கள் கிடைத்துள்ளன. அதில், சில கல்லுாரிகள், மாணவர்களின் ஹால் டிக்கெட் சரிபார்ப்பு, அடையாள சரிபார்ப்புகள் என, தேர்வு நடைமுறையின் போது தலையிடுவதாக புகார்கள் வந்துள்ளன.
பல்கலை இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், தேர்வு நடக்கும் போது, தேர்வு மைய வளாகத்துக்குள் நுழையக் கூடாது; தேர்வு நடைமுறையில் தலையிடக் கூடாது.
அறிவுறுத்தல்களை மீறி செயல்படும் கல்லுாரி நிர்வாகத்தின் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலை செமஸ்டர் தேர்வுகள் சீராக நடக்க, கல்லுாரி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
