மன அழுத்தம் வேண்டாம்! சொல்கிறார் டாக்டர் சுரேஷ் தாமோதரா
மன அழுத்தம் வேண்டாம்! சொல்கிறார் டாக்டர் சுரேஷ் தாமோதரா
UPDATED : மார் 10, 2024 12:00 AM
ADDED : மார் 10, 2024 08:48 AM
கோவை:
இந்தியாவில் மூன்றில் ஒருவரை, இதய நோய் தாக்கும் அபாயம் உள்ளது; ஆகவே அனைவரும் நன்கு உறங்க வேண்டும். மன அழுத்தத்துக்கு ஆட்படக்கூடாது என்று அமெரிக்க ஹார்ட் அசோசியேஷன் தலைவர் டாக்டர் சுரேஷ் தாமோதரா பேசினார்.இதய நோய்களுக்கு அதிநவீன சிகிச்சை தொடர்பான சர்வதேச கருத்தரங்கு, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, பி.எஸ்.ஜி., மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் சார்பில் நடந்தது.இதில், அமெரிக்கா ஹார்ட் அசோசியேஷன் தலைவர் டாக்டர் சுரேஷ் தாமோதரா பேசுகையில் இதயம் சார்ந்த நோய், உலகளவில் அதிக இறப்புகளை ஏற்படுத்தும் நோயாக உள்ளது. சமீப காலமாக, 30, 40 வயதுக்குள் உள்ளவர்களும், இதய பாதிப்பால் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் 3ல் ஒருவரை இதய நோய் தாக்கும் அபாயம் உள்ளது. நன்றாக துாங்கி, மன அழுத்தத்திற்கு ஆட்படாமல் இருந்தாலே, இப்பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். இன்றைய இளைஞர்கள் அதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.அமெரிக்கா சின்சினாட்டி பல்கலை இதய சிகிச்சை துறை இயக்குனர் டாக்டர் சக்திவேல் சடையப்பன் கூறுகையில், மாரடைப்பு சார்ந்த அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டியது அவசியம்.உலகளவில், அனைத்து புற்றுநோய் இறப்புகளை சேர்த்தாலும், இதய நோய் காரணமாக இறப்பவர்களே அதிகம். இப்பாதிப்பு வந்தவர்களில், 24 சதவீதத்தினர் ஓராண்டிலும், 50 சதவீதத்தினர் 5 ஆண்டுகளிலும் இறப்பை சந்திக்கின்றனர். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு.இங்கு வாழ்வியல், உணவு பழக்கவழக்கங்கள், உடல் பருமன், மேற்கத்திய உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை முக்கிய பிரச்னையாக உருவாகியுள்ளது என்றார்.முன்னதாக கல்லுாரி அரங்கில் நடந்த கருத்தரங்கை, முதல்வர் பிருந்தா துவக்கி வைத்தார். அமெரிக்க பல்கலை, மருத்துவமனைகளை சேர்ந்த, 10 இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர்.பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி செயலாளர் கண்ணையன், மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட் முதல்வர் சுப்பாராவ், இயக்குனர் புவனேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.