பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்; அதிக மதிப்பெண்கள் பெற முனைப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவக்கம்; அதிக மதிப்பெண்கள் பெற முனைப்பு
UPDATED : மார் 28, 2024 12:00 AM
ADDED : மார் 28, 2024 10:20 AM

-நிருபர் குழு -
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று முந்தினம் துவங்கியது. தேர்வு அறைக்கு செல்வதற்கு முன், மாணவர்கள் பாடப்புத்தகங்களை புரட்டி, படித்தவைகளை நினைவுபடுத்திக் கொண்டனர்.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 52 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வை எழுத, 4,526 மாணவர்கள், 4,623 மாணவியர் என, 9,149 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் தவிர தனித் தேர்வர்களாக, 138 பேர் பங்கேற்கின்றனர். பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
அறை கண்காணிப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள், வழித்தட அலுவலர்கள், பறக்கும் படை என, மொத்தம், 800க்கும் மேற்பட்டோர் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, தமிழ்ப்பாடத் தேர்வு துவங்கிய நிலையில், மாணவ, மாணவியர் அரை மணி நேரத்திற்கு முன்னரே மையத்திற்கு வந்தனர். சில மையங்களில், தேர்வு எழுத வரும் மாணவர்கள் மொபைல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
முறைகேடுகளில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்தனர். அதேநேரம், மாணவ, மாணவியர் பலர், ஒரு முறை மீண்டும் பாடப் புத்தகங்களைப் புரட்டி, படித்த பாடப்பகுதிகளை நினைவு படுத்திக்கொண்டனர். இறைவழிபாடு செய்து தேர்வு அறைக்குள் நுழைந்தனர்.
காலை, 10:00 மணிக்கு தேர்வு துவங்கி, மதியம் 1:15 மணிக்கு முடிந்தது. 15 நிமிடங்கள் வினாத்தாள் படிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், பொள்ளாச்சி மாரியம்மாள் பள்ளியில் நடந்த பொதுத்தேர்வை கல்வி மாவட்ட அலுவலர் கேசவ்குமார் பார்வையிட்டார்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தேர்வுக்கு வராத மற்றும் தேர்ச்சி பெறாத அனைத்து மாணவர்களும், துணை தேர்வு எழுதுவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றனர்.
உடுமலை
உடுமலையில், 19 மையங்களில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. நேற்று, 4,478 மாணவர்களும், 5 மாற்றுத்திறனாளி மாணவர்கள், 51 தனித்தேர்வர்களும் தமிழ் தேர்வு எழுதினர். 92 மாணவர்கள் தேர்வுக்கு ஆப்சென்ட் ஆகினர். தனித்தேர்வர்களுக்கு, உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மையமாக அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான வினாத்தாள்கள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து, போலீஸ் பாதுகாப்புடன் ஐந்து வழித்தடங்களில் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. தேர்வுக்கு செல்லும் மாணவர்கள், ஆசிரியர்களிடம் வாழ்த்து பெற்று, வழிபாடு செய்தனர்.

