நகரின் துாய்மை காக்க மாணவர்களுக்கு அறிவுரை தினமும் ஒரு பள்ளியில் கமிஷனர் ஆய்வு
நகரின் துாய்மை காக்க மாணவர்களுக்கு அறிவுரை தினமும் ஒரு பள்ளியில் கமிஷனர் ஆய்வு
UPDATED : செப் 04, 2024 12:00 AM
ADDED : செப் 04, 2024 08:10 AM
பொள்ளாச்சி:
திடக்கழிவு மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தினமும் ஒரு பள்ளிக்கு சென்று கமிஷனர் அறிவுரை வழங்குகிறார்.
பொள்ளாச்சி நகராட்சியில், 36 வார்டுகளில், 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழு அளவில் செயல்படுத்த மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில், மாணவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தினால் நிச்சயம் துாய்மையான நகரமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில், தினமும் ஒரு பள்ளிக்கு சென்று, மாணவர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வடுகபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், காலை உணவு திட்டத்தின் போது, பள்ளிக்கு சென்ற கமிஷனர் கணேசன், தரமான உணவு வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். மாணவர்களுடன் அமர்ந்து உணவை உட்கொண்டு, உணவின் தரத்தில் எந்த சமரசமும் கூடாது என, உணவு தயாரித்து வழங்குபவர்களிடம் அறிவுறுத்தினார். மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நகராட்சி கமிஷனர் கூறியதாவது:
துாய்மையான நகரமாக மாற்ற வேண்டும் என்பதை இலக்காக கொண்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ரோட்டோரங்களில் குப்பைகள் தேங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழு அளவில் செயல்படுத்த வேண்டும் என, வீடுவீடாக சென்று செல்வதை விட, மாணவர்களிடம் இந்த விஷயத்தை கொண்டு சென்றால், மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை உள்ளது.
அதன்படி, தினமும் ஒரு பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் திடக்கழிவு மேலாண்மை குறித்து விளக்கப்படுகிறது.பெற்றோர் மட்டுமின்றி உறவினர்கள், அருகில் வசிப்போர் என பலருக்கும் இந்த தகவல்கள் சென்றடையும். இதனால், மக்கும், மக்காத குப்பை என்றால் என விளக்கப்பட்டது. குப்பையை தரம் பிரித்து துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பள்ளி, வீட்டை சுத்தமாக வைத்து இருப்பதை போன்று, தெருக்களையும் சுத்தமாக வைத்திருந்தால், நகரம் துாய்மையாகிவிடும்.
மேலும், குப்பை தரம் பிரித்து தருவது குறித்து பெற்றோரிடம் விளக்க வேண்டும் என்றும், குப்பை தரம் பிரித்து வழங்கப்பட்டதாக மாணவர்கள், பெற்றோரிடம் நோட்டில் கையெழுத்து வாங்கி வந்து ஆசிரியர்களிடம் காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தினமும் ஒரு பள்ளிக்கு செல்லும் போது அங்கு என்ன தேவைகள் உள்ளன; என்ன வசதிகள் வேண்டும் என்பது குறித்து கேட்டறியப்படுகிறது. இதனால், பள்ளிக்கு தேவையானவற்றை செய்ய முடியும்.
பிளாஸ்டிக் இல்லாத பள்ளி!
பள்ளிகளுக்கு நேரடியாக செல்லும் கமிஷனர், பிளாஸ்டிக் இல்லாத பள்ளிஆக மாற்ற வேண்டுமென வலியுறுத்தி வருகிறார். மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் பல்வேறு தீங்குகள் ஏற்படுகின்றன.பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். உணவுகள், பிளாஸ்டிக் பைகளில் வாங்கிச் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், பள்ளிகளில் பிளாஸ்டிக் முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் இல்லாத பள்ளி என போர்டு வைப்பதுடன், அதனை முறையாக பின்பற்ற வேண்டும். ஆய்வு செய்ய வரும் போது, கண்டிப்பாக பார்ப்பேன், என்றார்.