திட்ட அறிக்கையின் தகவல்களை நிறுவனங்கள் இனி ஆன்லைனில் பெறலாம்
திட்ட அறிக்கையின் தகவல்களை நிறுவனங்கள் இனி ஆன்லைனில் பெறலாம்
UPDATED : ஏப் 24, 2026 12:15 PM
ADDED : ஏப் 24, 2026 12:16 PM
சென்னை:
தொழில் நிறுவனங்கள், திட்ட அறிக்கை தயாரிக்க தேவையான அடிப்படை தகவல்களை, 'ஆன்லைன்' முறையில் பெற அனுமதிக்கலாம் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிதாக தொழிற்சாலைக்கான கட்டடங்கள் கட்டுவது போன்ற பணிகளுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். இது தொடர்பான திட்டங்களை செயல்படுத்த விரும்பும் நிறுவனங்கள், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பத்தில், சம்பந்தப்பட்ட திட்டம் குறித்த விரிவான அறிக்கை இருக்க வேண்டும். குறிப்பாக, அத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியில் மண்ணின் தன்மை, காற்று மாசு அளவு, தண்ணீர் தரம், மக்கள் தொகை விபரம் போன்ற அடிப்படை தகவல்கள் இருக்க வேண்டும்.
இந்த அடிப்படை தகவல்களை, அரசு துறைகளை நேரடியாக அணுகி, தொழில் நிறுவனங்கள் பெற்று வருகின்றன. இதில், நடைமுறை ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில், சுற்றுச்சூழல் அனுமதிக்கான அறிக்கைக்கு தேவையான தகவல்களை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஆன்லைன் முறையில் பெற அனுமதிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதை ஏற்று, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:
தொழில் நிறுவனங்கள், அமைப்புகள், விரிவான அறிக்கை தயாரிக்க, அடிப்படை தகவல்களை ஆன்லைன் முறையில் பெறுவதை அனுமதிக்கலாம். சம்பந்தப்பட்ட துறைகளின் இணையதளங்களில் இருந்து, இத்தகவல்களை நிறுவனங்கள் பெறுவதற்கான வழியை, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவால், தொழில் சார்ந்த திட்டங்களுக்கு அறிக்கை தயாரிக்கும் பணிகள் விரைவில் நிறைவடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
