பள்ளி, கல்லுாரி அருகே பீடி, சிகரெட் விற்றால் புகார் செய்யுங்க: உணவுப் பாதுகாப்புத்துறை களம் இறங்கும்
பள்ளி, கல்லுாரி அருகே பீடி, சிகரெட் விற்றால் புகார் செய்யுங்க: உணவுப் பாதுகாப்புத்துறை களம் இறங்கும்
UPDATED : நவ 28, 2024 12:00 AM
ADDED : நவ 28, 2024 08:25 AM

மதுரை:
மதுரையில் பள்ளி, கல்லுாரி அருகே 100 மீட்டர் சுற்றளவிற்குள் உள்ள கடைகளில் பீடி, சிகரெட் விற்றால் உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் செய்யலாம்.
மதுரை தெற்கு தாலுகா ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் நேற்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது. அங்குள்ள பள்ளிக்கு அருகில் இருந்த பெட்டிக்கடையில் பீடி, சிகரெட் விற்கப்படுகிறதா என கலெக்டர் ஆய்வு நடத்தினார். கடையில் இருந்த 50 சிகரெட் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டன. கோட்பா சட்டத்தின் கீழ் அக்கடைக்கு நகர்நல அலுவலர் இந்திரா அபராதம் விதித்தார்.
சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு நடத்தப்பட்ட உணவு பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு இலவச பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு பதிவு சான்றிதழ் வழங்கினார்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் கூறியதாவது:
ரோட்டோர உணவு, சிறு மளிகை விற்கும் 500 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு குறித்த இலவச பயிற்சி அளித்து பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி, கல்லுாரிக்கு அருகில் 100 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளில் பீடி, சிகரெட் விற்பதற்கு தடை உள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்கும் கடைகளை தொடர்ந்து ஆய்வு செய்து அபராதம் விதிக்கிறோம். தற்போது பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் பீடி, சிகரெட் விற்றால் அபராதம் விதிக்க உணவு பாதுகாப்புத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடைகளில் பீடி, சிகரெட் விற்பது தெரிந்தால் வாட்ஸ்அப் 94440 42322 ல் புகார் தெரிவிக்கலாம் என்றார்.