தர வரிசை தகவல்களை மாற்றியவர்கள் குறித்து போலீசில் புகார்?
தர வரிசை தகவல்களை மாற்றியவர்கள் குறித்து போலீசில் புகார்?
UPDATED : ஆக 09, 2024 12:00 AM
ADDED : ஆக 09, 2024 10:35 AM

சென்னை:
'இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள் தர வரிசை தகவல்களை, தவறான தொலைபேசி எண் மற்றும் மாவட்ட விபரங்களுடன் மாற்றி வெளியிட்ட நபர்கள் குறித்து, 'சைபர் கிரைம்' போலீசில் புகார் அளிக்கப்படும்' என, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
இன்ஜினியரிங் வகுப்பில் சேர, விண்ணப்பம் கோரப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் தகுதி பெற்ற 1 லட்சத்து 97,601 மாணவர்களுக்கான தர வரிசை பட்டியல், கடந்த மாதம் 10ம் தேதி வெளியிடப்பட்டது.
தர வரிசை பட்டியலை அனைவரும் அறிந்து கொள்வதற்காக, www.tneaonline.org இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதில், மாணவர்களின் தர வரிசை எண், விண்ணப்ப எண், பெயர், பிறந்த தேதி, மதிப்பெண், ஜாதி, வகுப்பு தர வரிசை எண் போன்ற தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன; மாணவர்களின் தொலைபேசி எண் மற்றும் மாவட்ட விபரம் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால், மாணவர்களின் நலனுக்காக கொடுக்கப்பட்ட தர வரிசை தகவல்களை, சில விஷமிகள் தங்கள் சுயநலத்திற்காக, தவறான தொலைபேசி எண் மற்றும் மாவட்ட விபரங்களை மாற்றியமைத்து வெளியிட்டது தெரிய வந்துள்ளது.
இணைக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மாவட்ட விபரங்கள், அதிகாரப்பூர்வ தரவு தளத்தில் உள்ள தொலைபேசி எண்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களுடன், 88.34 சதவீதம் பொருந்தவில்லை.
இது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, தரவுகளை தவறாக கையாண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கலந்தாய்வு கடந்த மாதம் 22ம் தேதி துவங்கியது. இதுவரை சிறப்பு இட ஒதுக்கீட்டில் 836; முதல் சுற்றில் 24,177 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் விபரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சேர்க்கை தொடர்பான அங்கீகரிக்கப்படாத தொலைபேசி அழைப்புகளை, மாணவர்கள் நம்ப வேண்டாம். தங்கள் பயன்பாட்டு பெயர் மற்றும் பாஸ்வேர்டை யாரிடமும் பகிர வேண்டாம். சந்தேகம் இருந்தால், 1800 425 0110 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
மாணவர்கள் எவ்வித அச்சமும் இல்லாமல், தங்கள் விருப்பப்படி கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவை, கலந்தாய்வு வழியே தேர்வு செய்து கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.