தேர்தல் பிரிவின் குண்டக்க மண்டக்க அறிவிப்பு; மண்டையை பிய்த்துக்கொள்ளும் ஆசிரியர்கள்
தேர்தல் பிரிவின் குண்டக்க மண்டக்க அறிவிப்பு; மண்டையை பிய்த்துக்கொள்ளும் ஆசிரியர்கள்
UPDATED : ஏப் 02, 2024 12:00 AM
ADDED : ஏப் 02, 2024 11:37 AM
அன்னூர்:
தேர்தல் பிரிவு அதிகாரிகள் செய்த குழப்பத்தால், அன்னூர் வட்டாரத்தை சேர்ந்த உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஒரே பயிற்சி வகுப்பில், இரண்டாவது முறையாக நேற்றும் பங்கேற்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் ஒன்றியம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி தொகுதியில் உள்ளது. அன்னூர் வருவாய்த் துறையினர், அன்னூர் வட்டார ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை திருப்பூர் மாவட்டத்தில், தேர்தல் பணிக்கு நியமித்துள்ளனர்.
கோவை மாவட்ட நிர்வாகம், அன்னூர் ஆசிரியர்களை கோவையில் தேர்தல் பணி செய்ய நியமித்துள்ளது. கடந்த 24ம் தேதி முதல் கட்ட பயிற்சி வகுப்பு திருப்பூர் மற்றும் கோவையில் நடந்தது.
அன்னூர் வட்டாரத்தை சேர்ந்தவர்கள், திருப்பூர் மாவட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். இதையடுத்து, கோவையில் நடந்த பயிற்சியில் ஏன் பங்கேற்கவில்லை என அவர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
கடந்த 28ம் தேதி, கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற ஆசிரியர்கள் நாங்கள் திருப்பூரில் நடந்த பயிற்சியில் பங்கேற்றோம் என்று சான்றுகளை சமர்ப்பித்தனர். விளக்க கடிதம் கொடுத்தனர்.
இந்நிலையில், அன்னூர் ஆசிரியர்களுக்கு, கோவை மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள உத்தரவில், கடந்த 24ம் தேதி கோவையில் நடந்த முதல் கட்ட பயிற்சியில் பங்கேற்காதவர்கள், 30ம் தேதி கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் நடக்கும் பயிற்சியில், கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் அன்னூர் வட்டாரத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் நேற்று கோவையில் நடந்த முதல் கட்ட பயிற்சி வகுப்பில், இரண்டாவது முறையாக பங்கேற்றனர்.
இத்தனைக்கும் தேர்தல் பிரிவு அதிகாரிகளின் குழப்பமே காரணம் என, ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.