விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அரசு ஊழியர், ஆசிரியருக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தணும்
விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அரசு ஊழியர், ஆசிரியருக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தணும்
UPDATED : ஏப் 22, 2025 12:00 AM
ADDED : ஏப் 22, 2025 08:40 AM
நாமக்கல்:
நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு, அதிகரித்துள்ள விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, தன் ஊழியர்களுக்கு இரண்டு சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்கி உள்ளது.
இதே நிலையில் உள்ள, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொருளாதார நிதி இழப்பை சரி செய்ய, தமிழக முதல்வர், மத்திய அரசு அறிவித்துள்ள, இரண்டு சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு பதில், நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கி உரிய அறிவிப்பு வெளியிட வேண்டும்.மத்திய அரசு அறிவித்தவுடன், அதே சதவீதம் அளவு அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு அறிவிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை, மத்திய அரசு தமது ஊழியர்களுக்கு, இரண்டு சதவீதம், 'டிஏ' உயர்வு மட்டுமே அறிவித்துள்ளது.
ஏற்கனவே, மத்திய அரசு ஊழியர்களுக்கு, வீட்டு வாடகை படி உயர்த்தி அறிவித்துள்ளது. ஆனால், தமிழக அரசு அதுபோல், வீட்டு வாடகை படி உயர்வை அறிவிக்கவில்லை. அதனால், தமிழக அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த வீட்டு வாடகை படி கிடைக்காமல், நிதி பற்றாக்குறை மற்றும் பொருளாதார சமநிலை இழப்பு ஏற்பட்டுள்ளது. 2017ல், தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட எட்டாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளின் படி, மாநில அரசு ஊழியர்களின் ஊதியமானது, மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளது. இந்த ஊதியம் மேலும் குறையாமல் இருக்க, அகவிலைப்படியை, நான்கு சதவீதமாக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.