UPDATED : நவ 25, 2024 12:00 AM
ADDED : நவ 25, 2024 10:37 PM
சென்னை:
இந்திய அரசியல் சட்டத்தின், 75வது ஆண்டு விழாவையொட்டி, நாளை பள்ளி மற்றும் கல்லுாரிகளில், பல்வேறு போட்டிகள் நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய அரசியல் சட்டத்தின், 75வது ஆண்டை சிறப்பாக கொண்டாட, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி நாளை காலை, 11:00 மணிக்கு, தலைமை செயலகத்தில் உள்ள அனைத்து துறைகள், உயர் நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம் உட்பட அனைத்து துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், இந்திய அரசியல் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பள்ளி மற்றும் கல்லுாரிகளில், இந்திய அரசியல் சட்டத்தின், அடிப்படை கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகள் குறித்த, பேச்சுப் போட்டி, கருத்தரங்கு, வினாடி - வினா நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.