ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை எளிதாக்குவது குறித்து திருவனந்தபுரத்தில் ஆலோசனைக் கூட்டம்
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை எளிதாக்குவது குறித்து திருவனந்தபுரத்தில் ஆலோசனைக் கூட்டம்
UPDATED : நவ 03, 2025 07:28 AM
ADDED : நவ 03, 2025 07:31 AM
 சென்னை: 
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தேசிய புவி அறிவியல் ஆய்வு மையத்தில், “ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை எளிதாக்குவது” என்ற தலைப்பில் 8வது பிராந்திய ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 30, 31 தேதிகளில் நடைபெற்றது.
நித்தி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில், இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழலை வலுப்படுத்துவது குறித்து நிறுவனத் தலைவர்கள், துணைவேந்தர்கள், அறிவியல் அமைச்சக மற்றும் துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்தனர்.
நித்தி ஆயோக்கின் பேராசிரியர் விவேக் குமார் சிங், “ROPE” (Removing Obstacles, Promoting Enablers) என்ற புதிய அணுகுமுறையை அறிமுகப்படுத்தினார். இது ஆராய்ச்சியில் தடைகளை நீக்கி, ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
புவி அறிவியல் அமைச்சக செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன், ஆராய்ச்சி தரத்தையும் சமூகப் பயன்பாட்டையும் மேம்படுத்த பல்கலைக்கழகம்-தொழில்-அரசு இணைப்பை வலுப்படுத்த வேண்டும் என பரிந்துரைத்தார்.
நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் சரஸ்வத், “ஆராய்ச்சியை எளிதாக்க, உள் மற்றும் வெளி காரணிகளை ஒரே நேரத்தில் கையாள்வது அவசியம்” எனக் குறிப்பிட்டார்.
கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், “ஆராய்ச்சி மக்கள் மையப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்காக பயன்பட வேண்டும். மாநில வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்,” என தெரிவித்தார்.
கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள், அரசு பிரதிநிதிகள் கலந்துரையாடலுடன் கூட்டம் நிறைவடைந்தது.

