சிறுபான்மையின மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சியால் சர்ச்சை
சிறுபான்மையின மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சியால் சர்ச்சை
UPDATED : மார் 10, 2025 12:00 AM
ADDED : மார் 10, 2025 01:52 PM
பெங்களூரு:
சிறுபான்மையினர் மாணவியருக்கு மட்டும், தற்காப்பு கலை பயிற்சி திட்டத்தை அறிவித்தது, சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.
முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்கிரஸ் அரசு, நேற்று முன் தினம், 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தது. இதில் சிறுபான்மையினர் நலனுக்கு, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த சமுதாய மாணவர்களுக்கு தரமான கல்வி, மிக அதிகமான மாணவர் எண்ணிக்கை உள்ள உருது பள்ளிகளை தரம் உயர்த்துவது என, தாராளமாக திட்டங்களை வழங்கினார்.
இதில், சிறுபான்மையினர் இயக்குனரகம் நடத்தும் 169 உறைவிட பள்ளிகளின் 25,000 மாணவியரின் பாதுகாப்புக்காக, தற்காப்பு கலை பயிற்சி அளிக்கும் திட்டமும் அடங்கும். சிறுபான்மையினர் மாணவியருக்கு மட்டும், திட்டத்தை அறிவித்தது சசலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுபான்மை சிறுமியருக்கு மட்டும் தற்காப்பு கலை பயிற்சியா. மற்ற மாணவியருக்கு பாதுகாப்பு அவசியம் இல்லையா என, பலரும் கேள்வி எழுப்புகின்றனர். சித்தராமையா அரசின் திட்டம், சர்ச்சைக்கு காரணமாவது, இதுவே முதன் முறையல்ல.
இவர் 2013ல் முதன் முறையாக முதல்வரான போது, அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை கொண்டு வந்தார். இதற்கு கல்வி வல்லுனர்கள், மாணவர்களின் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர்.
மாநில அரசு மாணவர்களிடையே பாகுபாடு பார்ப்பது சரியல்ல. ஒரு சமுதாய மாணவர்களை மட்டும் சுற்றுலா அழைத்து சென்றால், மற்ற சமுதாய மாணவர்கள் ஏமாற்றம் அடைவர். இது மாணவர்களுக்கு இடையே வேற்றுமையை ஏற்படுத்தும். பகைமை உணர்வு உருவாகும் என, எச்சரித்தனர்.
அதன்பின் அந்த திட்டத்தை அரசு கைவிட்டது. அனைத்து மாணவர்களையும் சுற்றுலா அழைத்து செல்லும்படி பள்ளிகளுக்கு உத்தரவிட்டது.