UPDATED : மார் 06, 2025 12:00 AM
ADDED : மார் 06, 2025 08:06 PM
சென்னை:
தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுகிறது என்றால், அதற்கு காரணம் மத்திய அரசின் கல்விக்கொள்கை தானே தவிர, தி.மு.க.,வினர் காரணமல்ல என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதற்கு, தமிழக பா.ஜ., தரப்பில், அக்கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
பட்டியல் வெளியிடுவது நோக்கமல்ல
கட்சியினருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:
மும்மொழித் திட்டத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை விளக்கி, என் பிறந்த நாள் செய்தியை நான் வெளியிட்டிருந்த நிலையில், தமிழிசை வாழ்த்தி, தன் அன்பையும், தன் இயக்கத்திற்குரிய பண்பையும் காட்டியிருக்கிறார்.
தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில், ஹிந்தி இடம்பெறவில்லை. அதுதான் தமிழகத்தில் நிலவும் உணர்வின் வெளிப்பாடு. தமிழ்,- ஆங்கிலம் இரண்டு மொழிகளில் அமைந்த வாழ்த்துக்குப்பின், தெலுங்கு மொழியில் வாழ்த்தியிருக்கிறார். எனக்கு தெலுங்கு தெரியாது; நான் படித்ததும் இல்லை.
தெலுங்கானா மாநில கவர்னராக இருந்த தமிழிசை, தெலுங்கு மொழியை அறிந்திருக்க வாய்ப்புண்டு. இதிலிருந்தே, மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை. தேவைப்படுவோர் அதை புரிந்து பயன்படுத்த முடியும்.
தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில் மட்டும், ஹிந்தி கற்றுத் தரப்படுகிறது என, விமர்சனம் செய்கின்றனர். பரம்பரை பரம்பரையாகவே கல்வி வியாபாரம் செய்யும் பா.ஜ., குடும்பத்தினர் பட்டியலை வெளியிட்டு, பதிலுக்குப் பதில் பேசுவது நம் நோக்கமல்ல.
உரிய அனுமதியுடன் எந்தக் கட்சியை சார்ந்தவர்களும், எந்தவொரு கட்சியையும் சாராதவர்களும் பள்ளிகளை நடத்த முடியும். தி.மு.க.,வினரில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளை நடத்துவோரும், மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை நடத்துவோரும் உரிய அனுமதியுடன் தான் நடத்துகின்றனர்.
தனியார் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுகிறது என்றால், அதற்கு காரணம் மத்திய அரசின் கல்விக் கொள்கை தானே தவிர, தி.மு.க.,வினரோ, வேறு எந்தக் கட்சியினரோ தனிப்பட்ட முறையில் காரணமாக மாட்டார்கள்.
தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் எதிலும் மும்மொழித் திட்டம் கிடையாது. ஹிந்தி மொழி என்பது கட்டாயமுமில்லை. அந்த மொழியில் தேர்வு நடத்தப்படுவதுமில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.