ககன்யான் திட்டத்தில் ஒத்துழைப்பு; இஸ்ரோ- ஐரோப்பிய அமைப்பு ஒப்பந்தம்
ககன்யான் திட்டத்தில் ஒத்துழைப்பு; இஸ்ரோ- ஐரோப்பிய அமைப்பு ஒப்பந்தம்
UPDATED : டிச 06, 2024 12:00 AM
ADDED : டிச 06, 2024 05:18 PM

புதுடில்லி:
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் ஒத்துழைப்பு அளிப்பதற்காக, ஐரோப்பிய விண்வெளி அமைப்புடன், இஸ்ரோ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
2023ம் ஆண்டு ஜூலை 14ல் இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -3 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது. இதன் மூலம் இந்தியாவின் விண்வெளி திறன்களை கண்டு உலக நாடுகள் வியந்தன. இத்திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சந்திரயான்-4, ககன்யான் உள்ளிட்ட பல்வேறு விண்வெளி திட்டங்களை இஸ்ரோ விரைவுபடுத்தி உள்ளது.
ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி செல்லும் 4 இந்திய வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபன்சூ சுக்லா ஆகியோர் விண்வெளிக்கு செல்ல உள்ளனர்.
பூமியிலிருந்து, 400 கி.மீ., தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, 1 முதல் 3 நாள் ஆய்வுப் பணிக்கு பின் பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது தான் ககன்யான் திட்டத்தின் நோக்கம். அடுத்தாண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ககன்யான் திட்டத்தில் ஒத்துழைப்பு அளிப்பதற்காக, ஐரோப்பிய விண்வெளி அமைப்புடன், இஸ்ரோ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்மூலம், ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஆய்வு நிலையங்களில் இருந்து ககன்யான் விண்கலத்தின் பயணப்பாதையை கண்காணிக்க முடியும்.