ஆர்.டி.இ.,யில் மாணவியரை சேர்க்க தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
ஆர்.டி.இ.,யில் மாணவியரை சேர்க்க தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
UPDATED : ஜூன் 18, 2024 12:00 AM
ADDED : ஜூன் 18, 2024 08:06 AM

சென்னை:
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் காலியிடங்கள் உள்ளதால், மாணவியர் இருவரையும் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என கோவையை சேர்ந்த தனியார் பள்ளிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலுார் பகுதியை சேர்ந்த இளங்கோ, வெள்ளலுார் பகுதியை சேர்ந்த தீபக் ஆகியோர் தங்களின் மகள்களை, அதே பகுதிகளில் உள்ள கலைவாணி மெட்ரிகுலேசன், என்.ஜி.ஆர்.ஏ., நர்சரி பிரைமரி ஆகிய தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கக்கோரி, விண்ணப்பம் செய்திருந்தனர்.
பள்ளி அமைந்துள்ள பகுதியில் இருந்து, ஒரு கி.மீ., தொலைவுக்கு அப்பால், மாணவியர் வீடு அமைந்துள்ளது என்று கூறி, சேர்க்கை மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அதில், சம்பந்தப்பட்ட பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் காலி பணியிடங்கள் இருந்தும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதுதொடர்பாக, இரண்டு முறை பள்ளி நிர்வாகங்களுக்கு மனு அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுக்களை, நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். அப்போது, கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சார்பில், கூடுதல் அரசு பிளீடர் எம்.ராஜேந்திரன், பள்ளிகளில் காலியிடங்கள் பற்றிய அறிக்கையை தாக்கல் செய்தார்.
மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் டி.முத்து ஆஜராகி, ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால், மனுதாரர்களின் வீடு அமைந்து இருந்தாலும், சம்பந்தப்பட்ட இரு பள்ளிகளிலும், 25 சதவீத இடங்கள் வரை காலியாக உள்ளன. எனவே, மாணவியர் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையை பார்க்கும் போது, சம்பந்தப்பட்ட பள்ளிகளில், 2024 - 25ம் ஆண்டில் காலியிடங்கள் உள்ளன. எனவே, நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையில், இரு மாணவியர் சேர்க்கை விண்ணப்பத்தையும் பரிசீலிக்க வேண்டும்.
மனுதாரர்கள், வரும் 20ம் தேதி நீதிமன்ற உத்தரவுடன் பள்ளி நிர்வாகத்தை அணுக வேண்டும். மாணவியர் சேர்க்கையை, மாவட்ட கல்வி அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும். வழக்கு விசாரணை, ஜூலை 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.