பள்ளி கல்வி துறையில் 2 இணை இயக்குனர் பதவிகள் உருவாக்கம்
பள்ளி கல்வி துறையில் 2 இணை இயக்குனர் பதவிகள் உருவாக்கம்
UPDATED : ஜூன் 27, 2024 12:00 AM
ADDED : ஜூன் 27, 2024 10:41 AM
சென்னை:
மாதிரி பள்ளிகள், நான் முதல்வன் போன்ற சிறப்பு திட்டங்களை கவனிக்க, புதிதாக இரு இணை இயக்குனர்களை நியமிக்க உள்ளதாக, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
பள்ளிக்கல்வி துறையில், 10க்கும் மேற்பட்ட இயக்குனர்களுடன், 23 இணை இயக்குனர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் புதிதாக இரு இணை இயக்குனர் பணியிடங்களை உருவாக்கி, துறை செயலர் குமரகுருபரன் அரசாணை பிறப்பித்துள்ளார்.
இதற்காக, எட்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அரசிடம் திரும்ப அளித்து விட்டு, அவர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுத்தொகையை, இரு இணை இயக்குனர்களின் சம்பளம் மற்றும் செலவுகளுக்கு ஈடுகட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய இணை இயக்குனர்கள் பதவி, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், புதிய அறிவிப்புகளாக வெளியிட்டு செயல்படுத்தப்படும். இவர்கள், நான் முதல்வன்; மாதிரி பள்ளி; நம்ம ஊரு நம்ம பள்ளி; வானவில் மன்றம்; சிறார் திரைப்படங்கள் போன்ற சிறப்புத் திட்டங்களை கண்காணித்து, மேற்பார்வையிடும் பணிகளை மேற்கொள்வர் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.