UPDATED : ஜன 18, 2025 12:00 AM
ADDED : ஜன 18, 2025 10:09 PM

நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற, தேசிய தேர்வு முகமை நடத்தும் சி.யு.இ.டி., எனும் 'சென்ட்ரல் யுனிவர்சிட்டி என்ட்ரன்ஸ் டெஸ்ட்' எழுத வேண்டியது அவசியம்.
இளநிலை பட்டப்படிப்புகளில் சேர சி.யு.இ.டி., - யு.ஜி., தேர்வும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர சி.யு.இ.டி., - பி.ஜி., தேர்வும் தனித்தனியே நடத்தப்படுகிறது. 2025-26ம் கல்வியாண்டில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் தற்போது சி.யு.இ.டி., - பி.ஜி., தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி நிறுவனங்கள்:
அனைத்து மத்திய அரசு பல்கலைக்கழகங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், இதர பங்குபெறும் பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகள், நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள்.
கல்வித் தகுதி:
பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி, துறை சார்ந்த பிரிவில் இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும். தற்போது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை:
கம்ப்யூட்டர் வாயிலாக நடத்தப்படும் இத்தேர்வில் மொத்தம் 157 பாடப்பிரிவுகள் இடம்பெறுகின்றன. ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒருவர் அதிகபட்சம் 4 தேர்வு தாள்களுக்கு விண்ணப்பிக்கலாம். 90 நிமிடங்களுக்கு நடத்தப்படும் இத்தேர்வில் 75 கேள்விகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு சரியான பதிலுக்கும் தலா 4 மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் பிடித்தம் செய்யப்படுகிறது.
தேர்வு மையங்கள்:
நாடு முழுவதிலும் உள்ள 285 முக்கிய நகரங்களிலும், 27 வெளிநாடுகளிலும் 2025ம் ஆண்டிற்கான சி.யு.இ.டி., - பி.ஜி., தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு மையத்திற்கான நகரங்களை தேர்வு செய்வதில் இருப்பிடத்தை பொறுத்து, ஒரு மாணவர் அதிகபட்சம் 4 விருப்பங்களை பதிவு செய்யலாம். எனினும், தேர்வு மையத்தை நிர்ணயிப்பதில் தேசிய தேர்வு முகமையே இறுதி முடிவை எடுக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை:
https://cuetpg.ntaonline.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு விண்ணப்பத்தை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
பிப்ரவரி 1
தேர்வு நடைபெறும் நாள்:
மார்ச் 13 முதல் 31 வரை
விபரங்களுக்கு:
https://exams.nta.ac.in/CUET-PG#