சைபர் பாதுகாப்பு ஆய்வகம் சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கம்
சைபர் பாதுகாப்பு ஆய்வகம் சென்னை ஐ.ஐ.டி.,யில் துவக்கம்
UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 03:56 PM

சென்னை:
சென்னை ஐ.ஐ.டி., உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், ஐ.டி.பி.ஐ., வங்கியுடன் இணைந்து, சைபர் பாதுகாப்பு ஆய்வகத்தை உருவாக்கி உள்ளது.
இதன் துவக்க நிகழ்ச்சி, ஐ.ஐ.டி., வளாகத்தில் நேற்று நடந்தது. ஐ.டி.பி.ஐ., வங்கி தலைமை செயல் அலுவலர் ராகேஷ் சர்மா, ஆய்வகத்தை துவக்கி வைத்தார்.
அவர் பேசுகையில், இணைய அச்சுறுத்தல்களை முன்கூட்டியே எதிர்த்து போராடுவதற்கும், தரவு மற்றும் தகவல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், ஐ.டி.பி.ஐ., வங்கியின் உறுதிப்பாட்டிற்கு, இந்த முன்முயற்சி சான்றாக அமைந்துள்ளது. அனைத்து தரப்பினரும் பாதுகாப்புடன் கூடிய சூழலை உருவாக்க முயல்கிறோம், என்றார்.
சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேசியதாவது:
நாட்டின் பொருளாதாரத்தின் அடித்தளமாக விளங்கும், முக்கிய தகவல் உள்கட்டமைப்பான நிதித்துறை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இணைய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது.
இதுபோன்ற அமைப்புகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தொடர்ச்சியாக கவனித்து, செயல் திறன் மிக்க பாதுகாப்பு வழிமுறைகளை உருவாக்குவது மிகவும் அவசியம்.
ஐ.ஐ.டி., மற்றும் ஐ.டி.பி.ஐ., இடையிலான கூட்டுமுயற்சி, மிகச் சரியான நேரத்தில் உருவாகி உள்ளது. பாதுகாப்பு சவால்களுக்கு, விரிவாக தீர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சுகாதாரம், நிதி, தொழில் நுட்பம், விண்வெளி போன்ற முக்கிய துறை களில், பாதுகாப்பு தீர்வுகளை உருவாக்கவும், பயன்படுத்தவும், இந்த ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. மொபைல் போன் தொழில்நுட்பங்கள் தொடர்பான உற்பத்தி மற்றும் வணிகமயமாக்கலிலும் இந்த ஆய்வகம் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.