அரசு கல்லுாரியின் தற்காலிக கட்டடத்தால் அபாயம்! ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க அறிவுறுத்தல்
அரசு கல்லுாரியின் தற்காலிக கட்டடத்தால் அபாயம்! ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க அறிவுறுத்தல்
UPDATED : அக் 18, 2024 12:00 AM
ADDED : அக் 18, 2024 10:05 AM

ரிஷிவந்தியம்:
ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்த 2020ம் கல்வியாண்டு பயன்பாட்டிற்கு வந்தது.
இங்கு பி.ஏ., தமிழ், பொருளாதாரம், பி.காம்., பி.எஸ்சி., கணினிஅறிவியல், புள்ளியியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் உள்ளன. சுற்று வட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு பயிலுகின்றனர்.
முதல்வர், துறைத்தலைவர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் என மொத்தம் 16 பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
கல்லுாரிக்கென சொந்தமாக கட்டடம் இல்லை. இதனால், அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள 10 வகுப்பறை கட்டடங்கள் கல்லுாரிக்கென ஒதுக்கப்பட்டு, அங்கு தற்காலிகமாக இயங்கி வருகிறது.
மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப வகுப்பறை கட்டடங்கள் இல்லை. இதனால், கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக கல்லுாரி மாணவர்கள் போராட்டம் செய்தனர். இதையடுத்து, தினமும் இரண்டு ஷிப்ட்களாக கல்லுாரி நடக்கிறது.
முதல் ஷிப்டில் இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்களுக்கும், இரண்டாவது 'ஷிப்டில்' முதலாமாண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், கல்லுாரி வகுப்பறை கட்டடத்திற்குள் தண்ணீர் கசிகிறது.
இடைவிடாமல் சாரல் மழை பெய்வதால் வகுப்பறை கட்டட சுவர்கள் ஈரப்பதமாக உள்ளது. வகுப்பறையில் அமர்ந்து படிப்பதற்கேற்ற நிலை இல்லாததாலும், கட்டட சுவர்கள் இடிந்து விழ வாய்ப்புள்ளதாலும், மாணவர்கள் நலன் கருகி நேற்று (15ம் தேதி)யில் இருந்து கல்லுாரிக்கு வர வேண்டாம் எனவும், வீட்டிலிருந்தவாறு ஆன்லைன் மூலம் வகுப்பில் பங்கேற்குமாறும் கல்லுாரி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவ, மாணவிகள் நேற்று கல்லுாரிக்கு வரவில்லை.
ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிக்கான புதிய கட்டடம் பாவந்துார் பஸ் நிறுத்தம் அருகே கட்டப்பட்டுள்ளது.
ரூ.14 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடத்தில், தரைத்தளம் உட்பட 3 தளங்களில் 12க்கும் மேற்பட்ட வகுப்பறைகள், இயற்பியல், கணினி அறிவியல், வேதியியல் ஆய்வகங்கள், நுாலகம், அலுவலகம், துறைத்தலைவர்கள் அறை, முதல்வர் அறை, ஓய்வு அறை, மாணவ, மாணவிகளுக்கென தனித்தனி கழிவறைகள், தீயணைப்பு கருவிகள், சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் என அனைத்து வசதிகளும் உள்ளது.
இக்கட்டடம் கட்டி முடித்து 3 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. புதிய கட்டடம் திறக்கப்படாததால், மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலமாக பாடம் கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
வீட்டிலேயே இருப்பதால் மாணவர்கள் சரிவர வகுப்புகளில் பங்கேற்கமாட்டார்கள். இதே நிலை நீடித்தால் அடுத்த மாதம் 6ம் தேதி தொடங்க உள்ள அண்ணாமலை பல்கலைகழகத்தேர்வுகளில் மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெறக்கூடும்.
எனவே, மாணவ, மாணவிகளின் நலன்கருதி புதிதாக கட்டப்பட்ட கலைக்கல்லுாரி கட்டடத்தை உடனடியாக திறக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.