UPDATED : செப் 09, 2025 12:00 AM
ADDED : செப் 09, 2025 12:20 PM

சென்னை:
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில், 1.75 லட்சம் பேருக்கு மேலானவர்கள், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், 55 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆசிரியர்களும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறுவதை, உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கி உள்ளது.
அடுத்த மாதம் 15, 16ம் தேதிகளில் நடைபெற உள்ள, 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு, சமீபத்தில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., முடித்தவர்கள் தான் விண்ணப்பிப்பர் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பால், பணியில் உள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் நேற்று விண்ணப்பிக்க முற்பட்டனர்.
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்ததால், இணையதள சேவை ஸ்தம்பித்தது. இதையடுத்து, விண்ணப்பிக்க அவகாசம் வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
அதையேற்ற ஆசிரியர் தேர்வு வாரியம், இன்றும், நாளையும் அவகாசம் வழங்கி உள்ளது.