UPDATED : மே 08, 2024 12:00 AM
ADDED : மே 08, 2024 09:58 AM
கோவை:
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 21 அரசுப் பள்ளிகள் சென்டம் அடித்த நிலையில், இந்த ஆண்டு 11 பள்ளிகள் மட்டுமே சென்டம் அடித்துள்ளன.
கோவை மாவட்டத்தில், மொத்தம் 113 அரசுப்பள்ளிகள் உள்ளன. இதில், பிளஸ் 2 பொதுத் தேர்வை 3 ஆயிரத்து 302 மாணவர்களும், 4 ஆயிரத்து 930 மாணவிகளும் என மொத்தம் 8 ஆயிரத்து 232 பேர் தேர்வு எழுதினர். இதில், 2 ஆயிரத்து 971 மாணவர்களும், 4 ஆயிரத்து 714 மாணவிகளும் என 7 ஆயிரத்து 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன்படி, அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி 93.36 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டில் 93.81 சதவீதம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 0.45 சதவீதம் குறைந்துள்ளது.
அதேபோல, பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடந்த ஆண்டு 21 பள்ளிகள் சென்டம் ரிசல்ட் பெற்றன. ஆனால், இந்த ஆண்டு 11 அரசுப் பள்ளிகள் மட்டுமே சென்டம் ரிசல்ட் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்றவை 9.7 சதவீத பள்ளிகள் மட்டுமே.