UPDATED : நவ 04, 2024 12:00 AM
ADDED : நவ 04, 2024 03:51 PM

சென்னை:
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களில், 19 அரசு பல்கலைகளில் படித்த, 8.28 லட்சம் பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என, கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழக கவர்னர் ரவி, 20 அரசு பல்கலைகளின் வேந்தராக உள்ளார். மாணவர்களின் கல்வி மற்றும் தொழில்சார் முன்னேற்றத்தை கருத்தில் வைத்து, கடந்த மாதம், 31ம் தேதிக்குள், அனைத்து பல்கலைகளிலும், வருடாந்திர பட்டமளிப்பு விழாவை நடத்தி முடிக்க, துணை வேந்தர்களுக்கு உத்தரவிட்டார்.
முதலில், செப்., 9ல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் பட்டமளிப்பு விழா நடந்தது. அதைத்தொடர்ந்து, 18 அரசு பல்கலைகளின் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். கவர்னர் நேரடியாக 7,918 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
ஆளில்லா நிலையில், 8 லட்சத்து, 20,072 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி உள்ளார். கடந்த மாதம், 31ம் தேதி வரை, 19 அரசு பல்கலைகளில் படித்த, 8 லட்சத்து 27,990 பட்டதாரிகள், தங்கள் பட்டங்களை பெற்றுள்ளனர்.
மீதமுள்ள, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையில், வரும், 20ம் தேதி பட்டமளிப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்றைய போட்டி சூழலில், மாணவர்களுக்கு சரியான நேரத்தில் பட்டமளித்தல் உள்ளிட்ட, குறித்த காலத்திலான கல்வி செயல்பாடுகள் மிகவும் அவசியம்.
எனவே, அனைத்து அரசு பல்கலைகளிலும் பட்டமளிப்பு விழாவை, இனி வரும் ஆண்டுகளில், ஆகஸ்ட் முதல் அக்டோபருக்குள் நடத்தி முடிக்கும்படி, துணை வேந்தவர்களுக்கு கவர்னர் அறிவுறுத்தி உள்ளார்.
கவர்னர் மாளிகை எடுத்த உறுதிப்பாட்டின்படி, 19 அரசு பல்கலைகளுக்கான பட்டமளிப்பு விழாக்களை, அக்டோபருக்குள் நடத்தியிருப்பது இதுவே முதல் முறை.
இவ்வாறு கவர்னர் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.