விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் தாமதம்: வெற்றியாளர்கள் வேதனை
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் தாமதம்: வெற்றியாளர்கள் வேதனை
UPDATED : அக் 16, 2024 12:00 AM
ADDED : அக் 16, 2024 09:36 AM

மதுரை:
தேசிய பள்ளிகள் விளையாட்டு குழும போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாமல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இழுத்தடிக்கிறது.
ஆண்டுதோறும் மத்திய அரசின் எஸ்.ஜி.எப்.ஐ., சார்பில், 60 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. பள்ளிக்கல்வித்துறை மூலம் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அணியின் சார்பில் அனுப்பப்படுகின்றனர்.
பாதியாக குறைப்பு
தங்கப்பதக்கம் வெல்லும் வீரர் அல்லது வீராங்கனைகளுக்கு அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், தமிழக அரசின் சார்பில் 2 லட்சம், இரண்டாம் பரிசுக்கு ஒன்றரை லட்சம், மூன்றாம் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
கடந்த இரண்டாண்டுகளாக இத்தொகையை தமிழக அரசு பாதியாக குறைத்து விட்டது என்கின்றனர் அரசுப் பள்ளிகளின் உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள்.
அவர்கள் கூறியதாவது:
தற்போது முதல் பரிசாக ஒரு லட்சம், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகையையும் இழுத்தடிக்கின்றனர். 2022 - 23ம் ஆண்டில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தேசிய போட்டி
கடந்த 2023 - 24ம் ஆண்டுக்கு இன்னும் வழங்கவில்லை. இதில், 19 வயது பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்கள் பள்ளிப்படிப்பு முடிந்து கல்லுாரிக்கு சென்றிருப்பர். உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. தற்போது, 2024 - 25க்கான தமிழக அணித் தேர்வு முடிந்து தேசிய போட்டிகளுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 2023 - 24க்கான ஊக்கத்தொகையை உடனடியாக ஆணையம் வழங்குவதோடு, பழைய ஊக்கத்தொகையை வழங்கி மாணவர்களை கவுரவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.