UPDATED : ஜூன் 23, 2025 12:00 AM
ADDED : ஜூன் 23, 2025 10:34 AM

புதுடில்லி:
டில்லி பல்கலை இளங்கலை சேர்க்கைப் படிவத்தில், தாய்மொழி என்ற கேள்விக்கு, உருது என்ற மொழிக்குப் பதிலாக, முஸ்லிம் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது, தற்செயலான பிழை என பல்கலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
டில்லி பல்கலை இளங்கலை சேர்க்கைப் படிவத்தில் தாய்மொழி என்ற கேள்விக்கு இடம் பெற்றிருந்த மொழிகளில், உருது என்பதற்கு பதிலாக முஸ்லிம் என இடம் பெற்றிருந்தது. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது வகுப்புவாத சார்புடையது; உடனடியாக திருத்தம் செய்வது மட்டுமின்றி, பொதுவெளியில் பல்கலை நிர்வாகம் மன்னிப்பு கோர வேண்டும் என பேராசிரியர்களே கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், டில்லி பல்கலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இளங்கலை சேர்க்கை படிவத்தில் ஏற்பட்ட கவனக்குறைவான பிழைக்கு மனதார வருத்தம் தெரிவிக்கிறோம். இந்த தவறு திருத்தம் செய்யப்படும். இது தற்செயலாக ஏற்பட்ட பிழை. இதற்கு மறைமுக நோக்கங்களைக் காரணமாக பரப்ப வேண்டாம். டில்லி பல்கலையின் பன்முகத்தன்மை மற்றும் இணக்கமான சூழலைக் கெடுக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
மிராண்டா ஹவுஸ் பேராசிரியர் அபா தேவ் ஹபீப், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டில்லி பல்கலையின் இந்தச் செயல் இஸ்லாமிய வெறுப்பைத்தான் காட்டுகிறது. அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உருது மொழி சேர்க்கப்பட்டுள்ளது. அது, பல்கலையின் படிவத்தில் விடுபட்டிருப்பது கவலைக்குரியது என கூறியுள்ளார்.
இதேபோல, பல பேராசிரியர்கள், கல்வியாளர்கள் டில்லி பல்கலையின் இந்தச் செயலைக் கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.