தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை
UPDATED : பிப் 10, 2026 01:35 PM
ADDED : பிப் 10, 2026 01:36 PM
புதுச்சேரி:
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகளை உடனே மேம்படுத்த அரசு உத்தரவிட வேண்டும் என நேரு எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
பிள்ளைச்சாவடியில் 1985ம் ஆண்டு துவங்கப்பட்ட புதுச்சேரி பொறியியல் கல்லுாரி, 2020ம் ஆண்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டு, பின்னடைவை சந்தித்து வருகிறது.
3000 மாணவர்கள் பயிலும் பல்கலைக்கழகத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் நிலவுகிறது. செயல்படாத உபகரணங்களைக் கொண்ட ஆய்வகங்கள், நவீன மற்றும் ஆராய்ச்சிக்கான எந்த இயந்திரமும் இல்லை.
மோசமான நிர்வாகத்தால் 40 ஆண்டுகள் பழமையான பல்கலைக்கழகம் தேசிய தரவரிசைப் பட்டியலில், காரைக்கால் தேசிய தொழில்நுட்ப கல்லுாரியை விட பின் தங்கிய நிலையில் உள்ளது.
வகுப்பறையில் மாணவர்களுக்கு மத்தியில் நாய் அமர்ந்து இருப்பது, வளாகத்தில் பன்றிகள் மேய்வது, குப்பைகளை அகற்றாமல் இருப்பது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ஆகையால் மூடிய மேற்படிப்புகளை மீண்டும் துவங்கவும், மாணவர்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பல்கலைக் கழகத்தில் அடிப்படை வசதிகளை உடனே செய்து தர துணை வேந்தருக்கு அரசு உத்தரவிட வேண்டும். இல்லையெனில், பல்கலைக்கழக மாணவர்களுக்காக நமது மக்கள் கழகம், பொதுநல அமைப்புகள் சார்பாகவும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

