போட்டிக்கு தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு கலை பண்பாட்டு துறையினர் மீது கொதிப்பு
போட்டிக்கு தாமதமாக வந்ததால் அனுமதி மறுப்பு கலை பண்பாட்டு துறையினர் மீது கொதிப்பு
UPDATED : ஜூலை 19, 2026 12:38 PM
ADDED : ஜூலை 19, 2026 12:39 PM
ஈரோடு:
ஈரோட்டில் மாவட்ட கலை போட்டியில் தாமதமாக வந்த மாணவ, மாணவியரை, அதிகாரிகள் அனுமதிக்காததால், பெற்றோர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை மண்டல கலை பண்பாட்டுத்துறை சார்பில், ஈரோடு சிறுவர் மன்றம் வாயிலாக மாவட்ட அளவிலான கலை போட்டிகளான குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நேற்று நடந்தது. கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் செந்தில் குமார் தலைமை வகித்தார்.
போட்டியில், 5 முதல் 16 வயது வரையிலான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். காலை, 10:30 மணிக்குள் தங்களது வருகையை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், 10க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தாமதமாக வந்தனர். இதனால் அவர்களை, கலை பண்பாட்டுத்துறை அதிகாரிகள், அனுமதிக்காமல் பிரதான வாயில் கதவை அடைத்தனர்.
போக்குவரத்து அதிகமுள்ள ஈரோடு-மேட்டூர் பிரதான சாலையில், சுட்டெரிக்கும் வெயிலில் பெற்றோர்களுடன் நிற்கும் நிலை ஏற்பட்டது.இந்நிலையில் கதவு திறக்கப்பட்டதால், மாணவ, மாணவியரை போட்டியில் அனுமதிக்க பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கலை பண்பாட்டு துறை அதிகாரிகள் சம்மதிக்காததால், நீண்ட நேரம் வரை இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் நடந்தது.
அதன்பின் அனுமதிக்கப்பட்ட நிலையில், பரிசு, சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. பரிசு, சான்றிதழ் கிடைக்காது என தெரிந்ததும் மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
பெற்றோர்கள் கூறியதாவது:
போட்டியை எப்படி நடத்துவது என்பது குறித்து கலை பண்பாட்டுத்துறைக்கே ஒரு தெளிவு இல்லை. போட்டிகள் தொடர்பாக மூன்று செய்திக்குறிப்புகளை வெளியிட்டிருந்தனர். ஒரு செய்திக்குறிப்பில், 9:00 மணி, மற்றொரு செய்திக்குறிப்பில், 9:30, இன்னொரு செய்திக்குறிப்பில், 10:30 மணி என குறிப்பிட்டிருந்தனர்.
போட்டியில் பங்கேற்க வைக்க, குழந்தைகளுக்கு ஒரு வாரத்துக்கு மேல் பயிற்சி அளித்தோம். அலங்காரம் செய்ய, 3,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்தோம். குழந்தைகளும் ஆர்வமாக வந்தனர். ஆனால், கலை பண்பாட்டுத்துறையின் அடாவடி போக்கால் ஏமாற்றமே மிஞ்சியது. இவ்வாறு கூறினர்.
கலை பண்பாட்டுத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சில நாட்களுக்கு முன் முறையாக அறிவிப்பு செய்தோம். 10:30 மணிக்குள் வரும் மாணவர்களே போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். தாமதமாக வந்தால் அனுமதி கிடையாது என தெரிவித்து இருந்தோம். ஆனாலும் அவர்களின் ஏமாற்றத்தை தவிர்க்கவே போட்டியில் பங்கேற்க அனுமதித்தோம். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை' என்றனர்.
