UPDATED : டிச 23, 2025 07:15 AM
ADDED : டிச 23, 2025 07:16 AM

கோவை:
கோவை மாவட்டத்தில், ஆர்.பி.எஸ்.கே., மருத்துவ குழு பள்ளிகளில் மேற்கொண்ட தொடர் ஆய்வுகளின் படி, பல் சொத்தை மற்றும் கண் பார்வை ( பவர்) குறைபாடு அதிகளவில் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் ராஷ்ட்ரிய பால் சுவாஸ்த்ய காரிக்ரம் ( ஆர்.பி.எஸ்.கே.,) திட்டத்தின் கீழ், 0 முதல் 18 வயதுள்ள குழந்தைகளின் குறைபாடுகளை ஆரம்பநிலையில் கண்டறிந்து, உரிய சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.
0 முதல் ஆறு வயதுள்ள குழந்தைகள், அங்கன்வாடி மையங்கள் வாயிலாகவும், 6 முதல் 18 வயதுள்ள குழந்தைகள் பள்ளிகள் வாயிலாகவும், மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், 27 மருத்துவ குழுக்கள் உள்ளன. மாணவர்களை ஸ்கிரீனிங் செய்து, 30 வகையான ஆரம்ப கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர் ஆய்வுகளில், பல் சொத்தை மற்றும் கண் பவர் குறைபாடு குழந்தைகள் மத்தியில் அதிகரித்து காணப்படுவதாக, திட்ட மருத்துவர்கள் தெரிவித்தனர்.
'வாய் சுகாதாரம் முக்கியம்' அரசு மருத்துவமனை டி.இ.ஐ.சி., மைய குழந்தைகள் நல மருத்துவர் மோகன்ராஜிடம் கேட்டபோது, ''வாய் சுகாதாரம் கட்டாயம் பின்பற்ற வேண்டியது அவசியம். உணவு உண்ட பின், வாய் கொப்பளித்தல், இரண்டு வேளை பல் துலக்குதல் அவசியம். பல் சார்ந்த பிரச்னை பெரிய அறிகுறிகள் இன்றி, திடீர் என்று வலி கடுமையாக ஏற்படும். அச்சமயத்தில் பல்லை பிடுங்குதல், ரூட் கெனால் போன்றவை செய்ய நேரிடுகிறது.
அதே போன்று, கண் பவர் குறைந்து கண்ணாடி அணிந்து இருந்தால், கண் விழித்து இருக்கும் நேரம் முழுவதும் அணிந்து இருக்க, குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். கண் பவர் குறைபாட்டுக்கு மொபைல், டி.வி., பயன்பாடும் ஒரு முக்கிய காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது, '' என்றார்.

