புராதன சின்னங்களை காக்கும் கடமை தொல்லியல் துறைக்கு உள்ளது: ஐகோர்ட்
புராதன சின்னங்களை காக்கும் கடமை தொல்லியல் துறைக்கு உள்ளது: ஐகோர்ட்
UPDATED : மே 06, 2024 12:00 AM
ADDED : மே 06, 2024 09:28 AM
சென்னை:
புராதன, தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் கடமை, மத்திய, மாநில தொல்லியல் துறைகளுக்கு உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், சிவன் கோவில் உள்ளது. இதை, கங்கைகொண்ட சோழிஸ்வரர் கோவில் என்று அழைப்பர். 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் அருகில், உணவகம், கழிப்பறைகளை கட்டியுள்ளனர்.
மீட்க வேண்டும்
இந்த கட்டுமானங்களால், தொல்லியல் சின்னங்களுக்கு சேதம் ஏற்படும். புதிய கட்டுமானங்களை அகற்றி, சோழிஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர் வெளியில், 300 மீட்டர் சுற்றளவை, பழைய நிலையில் மீட்க வேண்டும்' என, உயர் நீதிமன்றத்தில், தஞ்சை மாவட்டம், டி.மாங்குடியை சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் வி.விஜயகுமார், மத்திய தொல்லியல் துறை சார்பில், துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், மாநில தொல்லியல் துறை சார்பில், அரசு வழக்கறிஞர் கார்த்திக் ஜெகநாத், அறநிலையத்துறை உதவி ஆணையர் தரப்பில், சிறப்பு பிளீடர் சந்திரசேகரன் ஆஜராகினர்.
முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
நாட்டில் உள்ள தொல்லியல் சின்னங்களின் பாதுகாவலராக, மத்திய, மாநில தொல்லி யல் துறைகள் உள்ளன.
நடவடிக்கை
தொல்லியல், புராதன சின்னங்களை பாதுகாக்க வேண்டிய கடமை, அவர்களுக்கு உள்ளது. தொல்லியல் சின்னங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த செயலையும், யாரும் மேற்கொள்ள முடியாது.
பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கட்டப்பட்ட கழிப்பறை மற்றும் உணவகத்தை ஆய்வு செய்து, பாதுகாக்கப்பட்ட சின்னங்களுக்கு எந்த விதத்திலும் ஆபத்தில்லை என, மத்திய, மாநில தொல்லியல் துறைகள் உறுதி செய்ய வேண்டும்.
அங்கு, கட்டுமான இடிபாடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு அப்பால், உணவகம் மற்றும் கழிப்பறை இருக்கும் வகையில், தொல்லியல் துறைகள் பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து, மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.