மருத்துவ கல்லுாரி சீட் அதிகரிக்க நட்டாவுக்கு தேவகவுடா கடிதம்
மருத்துவ கல்லுாரி சீட் அதிகரிக்க நட்டாவுக்கு தேவகவுடா கடிதம்
UPDATED : ஆக 17, 2024 12:00 AM
ADDED : ஆக 17, 2024 11:38 AM
பெங்களூரு:
கர்நாடக ஒக்கலிகர் சங்கத்தின், கெம்பேகவுடா மருத்துவ கல்லுாரியின் எம்.பி.பி.எஸ்., சீட்களை, நடப்பு கல்வியாண்டில் 150லிருந்து, 250 ஆக உயர்த்த உதவும்படி, மத்திய அரசிடம் முன்னாள் பிரதமர் தேவகவுடா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவுக்கு, தேவகவுடா எழுதிய கடிதத்தில் கூறியதாவது:
கர்நாடக ஒக்கலிகர் சங்கத்தின், கெம்பேகவுடா மருத்துவ கல்லுாரி, 2024 - 25ம் கல்வியாண்டுக்கு எம்.பி.பி.எஸ்., சீட்களை 150லிருந்து 250 ஆக அதிகரிக்க, 2023 ஆகஸ்டில் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தது.
என்.எம்.சி., விதிமுறைகளை இந்த கல்லுாரி பின்பற்றுகிறது. என்.எம்.சி., சுட்டிக்காட்டிய குறைகளை சரி செய்து கொண்டது. மருத்துவ கல்லுாரி, மாநில ஒக்கலிகர் சங்கத்தின் முக்கியமான கல்லுாரியாகும். ஒக்கலிக மாணவர்கள் மட்டுமின்றி, நாடு முழுதும் மற்ற சமுதாயத்தின் திறமையான மாணவர்களுக்கும் கல்வி அளிக்கிறது.
ஒக்கலிகர் சங்கம், அரசு மருத்துவமனை போன்று, இலவச தங்கும் விடுதிகள், தரமான மருத்துவமனையை நடத்துகிறது. மெரிட் அடிப்படையில் கர்நாடகா மற்றும் நாட்டின் மற்ற மாநிலங்களின் திறமையான மாணவர்கள், தேர்வு செய்யும் டாப் 3 மருத்துவ கல்லுாரிகளில், இதுவும் ஒன்றாகும்.
பிரபலமான ஒக்கலிகர் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவ கல்லுாரி, நாட்டிலேயே பிரசித்தி பெற்றுள்ளது. இந்த கல்லுாரியில் மருத்துவ சீட்களை அதிகரித்தால், திறமையான மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.