டி.என்.பி.எஸ்.சி.,யில் விடைத்தாள் திருத்த புதிய மென்பொருள் உருவாக்கம்
டி.என்.பி.எஸ்.சி.,யில் விடைத்தாள் திருத்த புதிய மென்பொருள் உருவாக்கம்
UPDATED : செப் 24, 2024 12:00 AM
ADDED : செப் 24, 2024 12:43 PM

சென்னை:
அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்த, புதிய மென்பொருள் பயன்படுத்தப்பட உள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும் குரூப் 1, குரூப் 2 பணியிடங்களுக்கான தேர்வுகளில், ஓ.எம்.ஆர்., தாளில் விடையளிக்கும் வகையில், முதல்நிலை தேர்வும், விரிவான விடையளிக்கும் வகையில் முதன்மை தேர்வும் நடத்தப்படுகிறது. இவற்றின் மதிப்பெண் திருத்தத்தில் முறைகேடுகள், குளறுபடிகள் நடப்பதாக புகார்கள் எழுகின்றன.
அவற்றை களையும் வகையில், விடைத்தாள் மதிப்பெண் திருத்தத்திற்கு புதிய மென்பொருளை பயன்படுத்த, டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஜி.ஐ.எஸ்., முறையில் இயங்கும் இந்த மென்பொருள், விடைத்தாள்களை, ஸ்கேன் செய்து, விடைகளை தனியாக பிரித்து, திருத்தும் பேராசிரியர்களிடம் வழங்கும்.
அவர்கள், டி.என்.பி.எஸ்.சி., வழங்கியுள்ள விடைகளுடன் ஒப்பிட்டு, மதிப்பெண் வழங்குவர். இதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள்ளாக மதிப்பெண் வழங்க, இந்த மென்பொருள் அனுமதிக்காது.
பின், பாடவாரியாக மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, இறுதி மதிப்பெண் வழங்கப்படும். இந்த நடைமுறை விரைவில் கடைப்பிடிக்கப்பட உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் தெரிவித்தனர்.