UPDATED : அக் 02, 2026 05:57 PM
ADDED : அக் 02, 2026 05:58 PM
திருப்பூர்:
தாராபுரம் தொகுதியில் வரும் 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகள், சின்னக்காம்பாளையம், குளத்துப்பாளையம், மூலனுார், கன்னிவாடி, ருத்ராவதி பேரூராட்சிகள் மற்றும் தாராபுரம், மூலனுார், குண்டடம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 233 பள்ளிகள் ஓட்டுச்சாவடி மையங்களாக மாற்றப்படுகின்றன.
ஓட்டுப்பதிவுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வரும் 5ம் தேதி ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பப்பட உள்ளன. அன்றே பள்ளி வகுப்பறைகள் ஓட்டுச்சாவடிகளாக மாற்றப்பட்டு, தேர்தல் அலுவலர்களின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன.
இதனால், தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வரும் 5ம் தேதி மாவட்டத்தின் பிற பகுதிகளில் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்படும் நிலையில், தாராபுரம் தொகுதியில் உள்ள பள்ளிகள் மட்டும் வரும் 7ம் தேதி திறக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
