மாணவர்களிடம் அதிகரிக்கும் நீரிழிவு நோய்; சர்க்கரை அளவை கண்காணிக்க திட்டம்
மாணவர்களிடம் அதிகரிக்கும் நீரிழிவு நோய்; சர்க்கரை அளவை கண்காணிக்க திட்டம்
UPDATED : மே 18, 2025 12:00 AM
ADDED : மே 18, 2025 06:54 AM

புதுடில்லி:
மாணவர்களிடையே நீரிழிவு நோயை தடுக்கும் வகையில், அவர்கள் உட்கொள்ளும் உணவில் உள்ள சர்க்கரை அளவை தெரிவிக்கும் வகையிலான தகவல் பலகைகளை பள்ளிகளில் அமைக்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.
சர்க்கரை உணவு
மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், ஏராளமான மாணவர்கள், டைப் - 2 எனப்படும், இரண்டாம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுஉள்ளது தெரியவந்துள்ளது.
பெரியவர்கள் மத்தியில் மட்டுமே இருந்த இந்த குறைபாடு, சமீபகாலமாக சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதையடுத்து, மாணவர்கள் எடுத்து கொள்ளும் உணவில் உள்ள சர்க்கரை அளவை கண்காணிக்க முடிவு செய்த சி.பி.எஸ்.இ., அதற்கான முயற்சியை முன்னெடுத்து உள்ளது.
இது குறித்து சி.பி.எஸ்.இ., தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
மாணவர்கள் மத்தியில் டைப் 2 எனப்படும் இரண்டாம் வகை நீரிழிவு நோய் சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் அதிகளவு சர்க்கரை உணவு எடுத்துக்கொள்வதே இந்த ஆபத்தான நிலைக்கு காரணம்.
பள்ளி சூழலில் சர்க்கரை சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு கள் எளிதில் கிடைப்பதும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
அதிகப்படியான சர்க்கரை நுகர்வு நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் பருமன், பல் பிரச்னைகள் மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கும் பங்களிக்கிறது.
இறுதியில் குழந்தைகளின் நீண்டகால ஆரோக்கியம் மற்றும் கல்வி செயல்திறனை பாதிக்கிறது.
தகவல் பலகை
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 4 - 10 வயது வரையிலான குழந்தைகளுக்கு தினசரி கலோரி உட்கொள்ளலில் சர்க்கரை அளவு 13 சதவீதமாகவும், 11 - 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு 15 சதவீதமாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது.
இது, டாக்டர்கள் பரிந்துரைத்த 5 சதவீத வரம்பை கணிசமாக மீறுகிறது.
எனவே, அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளலின் அபாயங்கள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில், அது தொடர்பான விபரங்களை காண்பிக்கும் தகவல் பலகைகளை நிறுவ வேண்டும் என, பள்ளிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
இந்தப் பலகைகள், பரிந்துரைக்கப்பட்ட தினசரி சர்க்கரை உட்கொள்ளல், பொதுவாக உட்கொள்ளும் உணவுகளில் உள்ள சர்க்கரை அளவு, அதிக சர்க்கரை நுகர்வுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்கள் மற்றும் ஆரோக்கியமான உணவு மாற்றுகள் உள்ளிட்ட அத்தியாவசிய தகவல்களை வழங்க வேண்டும்.
இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த முயற்சி மாணவர்களின் ஆரோக்கியத்தை நிச்சயம் மேம்படுத்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.