பிரதமர் நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் பெற்றோர் புகார் அளித்தனரா: ஐகோர்ட் கேள்வி
பிரதமர் நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் பெற்றோர் புகார் அளித்தனரா: ஐகோர்ட் கேள்வி
UPDATED : ஏப் 05, 2024 12:00 AM
ADDED : ஏப் 05, 2024 07:02 PM
சென்னை:
கோவைக்கு, கடந்த 18ல் பிரதமர் மோடி வந்தார். அப்போது, 'ரோடு ஷோ' நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கோவையில் உள்ள அரசு உதவி பெறும் சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளி மாணவர்களை, பள்ளிச் சீருடையில் அழைத்து சென்றதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக, சிறார் நீதி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை புகழ்வடிவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதமர் நிகழ்ச்சி காரணமாக, மாணவர்களை வீட்டுக்கு அழைத்து செல்லும்படி, பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் அழைத்து செல்லாத குழந்தைகள் மட்டுமே பேரணிக்கு சென்றனர். அதற்கு எப்படி பொறுப்பேற்க முடியும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் முகிலன், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி விசாரணைக்கு பின் புகார் அளிக்கப்பட்டது. பிரதமர் நிகழ்ச்சியில், பள்ளி குழந்தைகளுடன் தலைமை ஆசிரியை உள்பட மூன்று ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
அரசியல் நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் பங்கேற்றது தவறு. கூட்ட நெரிசலில், நீண்ட நேரம் குழந்தைகளை நிற்க வைத்து, அவர்களுக்கு உடல், மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர் என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, பள்ளி குழந்தைகளை, பிரதமர் நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றது தொடர்பாக, பெற்றோர் எதுவும் புகார் அளித்து உள்ளனரா; நிகழ்ச்சியில் இருந்த போது பள்ளி ஆசிரியர்கள் யாரும் உடன் இருந்தனரா; சிறார் நீதி சட்டம் எப்படி பொருந்தும் என்பன குறித்து, போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, 8ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.
அப்போது, பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை, பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் தடை விதித்தார்.