டிஜிட்டல் கல்வியறிவு; இந்தியாவிலேயே முதல் மாநிலம் கேரளா!
டிஜிட்டல் கல்வியறிவு; இந்தியாவிலேயே முதல் மாநிலம் கேரளா!
UPDATED : ஏப் 15, 2025 12:00 AM
ADDED : ஏப் 15, 2025 11:42 PM

திருவனந்தபுரம்:
கேரளாவில் 21 லட்சம் மூத்த குடிமக்கள் டிஜி கேரளா எனும் டிஜிட்டல் கல்வியறிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறன் பெற்றுள்ளனர். இதன்மூலம், டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற அதிக மக்கள் வாழும் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.
டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்காக பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்ஷர்தா அபியான் (PMGDISHA) என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு, கணினி, செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகள் மற்றும் இணையதளப் பயன்பாட்டைப் பயன்படுத்த பயிற்சி அளிப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். 60 வயது வரையுள்ள மக்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்க வேண்டியதாகும்.
இந்தத் திட்டத்தை டிஜி கேரளா எனும் பெயரில் கேரள அரசு முழு முயற்சியாக மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் 21 லட்சம் மூத்த குடிமக்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற அதிக மக்கள் வாழும் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.
கேரளாவில் முதன்முதலாக புலம்பாரா கிராமப் பஞ்சாயத்தில் தான் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வீடியோ கால், வாய்ஸ் கால் பேசுவது, வாட்ஸ்அப் பயன்பாடு, அரசு திட்டங்களை டிஜிட்டல் வழியாக அறிந்து கொள்வது, வங்கி சேவைகள் மற்றும் சமூக வலைதளப் பயன்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, 21.88 லட்சம் பேர் டிஜிட்டல் கல்வியறிவு பயிற்சிகளை பெற்றுள்ளனர். என்.எஸ்.எஸ்., குடும்பஸ்ரீ உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் இந்த பயிற்சியை வழங்கியுள்ளனர்.