தினமலர் - பட்டம் வினாடி, வினா போட்டி துவக்கம்: முதல் போட்டியிலேயே பள்ளி மாணவர்கள் அசத்தல்
தினமலர் - பட்டம் வினாடி, வினா போட்டி துவக்கம்: முதல் போட்டியிலேயே பள்ளி மாணவர்கள் அசத்தல்
UPDATED : செப் 03, 2026 06:38 PM
ADDED : செப் 03, 2026 06:43 PM
விழுப்புரம்:
தினமலர் புதுச்சேரி பதிப்பின், இந்தாண்டிற்கான, மெகா 'வினாடி வினா' போட்டி, விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், நேற்று துவங்கியது. முதல் நாளிலேயே பள்ளி மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று அசத்தலாக பதிலளித்தனர்.
புதுச்சேரி, தமிழக பள்ளி மாணவர்களுக்காக, 'தினமலர் - பட்டம்' இதழ், வினாடி, வினா போட்டி, ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
புதுச்சேரி பதிப்பு சார்பில், இந்தாண்டு, மெகா வினாடி, வினா போட்டி, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தம், 150 பள்ளிகளுக்கு நடத்தப்பட உள்ளது.
இதனை, 'தினமலர் - பட்டம்' இதழுடன், புதுச்சேரி ஆச்சாரியா உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகிறது.
இந்த மெகா வினாடி, வினா போட்டி, விழுப்புரம் பள்ளிகளில் நடத்தப்பட உள்ளது. முதல் பள்ளியாக, விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், வினாடி, வினா போட்டிக்கான தகுதி சுற்றாக, முதல்நிலை தேர்வு நேற்று நடந்தது.
இதில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை பயிலும் 600 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு பொது அறிவு உட்பட 25 வினாக்கள் கேட்கப்பட்டு, 20 நிமிடங்கள் தேர்வு நடந்தது.
அதிக மதிப்பெண் அடிப்படையில் தலா, 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான வினாடி வினா போட்டி துவக்க நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில், நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) அருள், ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இதில், சரஸ்வதி குரூப் ஆப் பள்ளி முதன்மை தாளாளர் ராஜசேகரன், பொருளாளர் சிதம்பரநாதன், சரஸ்வதி சென்ட்ரல் பள்ளி (சி.பி.எஸ்.இ.,) தாளாளர் முத்துசரவணன், முதல்வர் யமுனாராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, 16 மாணவர்களும், 8 அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி வினா போட்டி நடந்தது. இந்த போட்டி, 3 சுற்றுகளாக அரங்கேறியது.
ஒவ்வொரு சுற்றிலும் 8 திணறடிக்கும் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த, 8 அணியினருக்கும், வினாக்கள் கேட்கப்பட்டன. அதன் பின், அனைத்து அணியினருக்கும் பொதுவான கேள்விகள் கேட்கப்பட்டு, அதில் முதலில் பதில் சொல்லும் அணிக்கு, மதிப்பெண் தரப்பட்டது.
சவாலான கேள்விகளை அசத்தலாக எதிர்கொண்டு மாணவர்கள் பதிலளித்தனர். இறுதியில், 8 ம் வகுப்பு மாணவிகள் விஜயஸ்ரீ, திவ்யஸ்ரீ ஆகியோர் அடங்கிய அணி, முதலிடம் பிடித்து அசத்தியது. 8 ம் வகுப்பு மாணவி ஹரிணி, 7 ம் வகுப்பு மாணவி யாஷிகா ஆகியோர் அடங்கிய மற்றொரு அணி இரண்டாம் இடம் பிடித்தது.
முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த அணிகள் மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடக்கும், அடுத்த சுற்றுக்கு தேர்வானது.
போட்டியில் சரியான விடையளித்த மாணவர்களை பார்வையாளர்கள் கர ஒலி எழுப்பி, உற்சாகப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) அருள், ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் ஆகியோர் பதக்கம், பரிசு , சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், வினாடி வினா போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு விருந்தனர்கள் வாழ்த்தி பேசினர். இதே போல், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மீதமுள்ள பள்ளிகளில் நடக்கும் தினமலர் மெகா போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணி, மாநில அளவிலான அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதில், முதலிடம் பிடித்து வெற்றி பெறும் மாணவர்களுக்கு அசத்தலான, அமர்க்களமான பரிசுகள் காத்திருக்கின்றன.
மாணவியை பாராட்டிய கலெக்டர் கலெக்டர் அப்துல் ரஹ்மான், மாணவர்களுக்கு அறிவு சார்ந்த விஷயங்களை செய்தித்தாள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என கூறினார். அப்போது அவர், மருந்து கண்டுபிடித்தது பற்றி மாணவ, மாணவிகளை நோக்கி, 'யாருக்காவது தெரியுமா' என கேள்வி எழுப்பினார்.
இதற்கு, 8ம் வகுப்பு பயிலும் மாணவி துவாரகா எழுந்து, 'பெனிசிலின்' பாக்டீரியா தொற்றுகளை குணப்படுத்த பயன்படும் ஒரு முக்கியமான ஆண்டிபயாடிக் மருந்தாகும் என்றும், இந்த மருந்தை அலெக்சாண்டர் பிளெமிங் கண்டுபிடித்ததன் காரணம் பற்றியும் கூறினார். கலெக்டர், அந்த மாணவியை பாராட்டினார். இந்த மாணவிக்கு, சக மாணவ, மாணவிகளும் நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் வாழ்த்துக்களை கூறினர்.
