தினமலர் நாளிதழின் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவர்கள் ஆர்வம்
தினமலர் நாளிதழின் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி: மாணவர்கள் ஆர்வம்
UPDATED : ஜூன் 17, 2024 12:00 AM
ADDED : ஜூன் 17, 2024 10:09 AM

சென்னை:
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வது குறித்து விளக்கம் அளிக்கும், 'தினமலர்' நாளிதழின் வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னையில் வரும், 22ம் தேதி இரு இடங்களில் நடக்கிறது.
இதில், பங்கேற்க மாணவர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள், ஆன்லைன் கவுன்சிலிங்கில், தங்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வது குறித்து விரிவாக விளக்கம் அளிக்க, தினமலர் நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்தாண்டுக்கான நிகழ்ச்சி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியுடன் இணைந்து, 22ம் தேதி சென்னை தி.நகர் சர்.பிட்டி.தியாகராயா அரங்கில் காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.
அதன்பின், தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள, டி.ஜி.பி., கல்யாண மண்டபத்தில் பிற்பகல், 3:00 முதல் மாலை, 6:00 மணி வரை நடக்கிறது. இந்நிகழ்ச்சியில், தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் பேராசிரியர் புருேஷாத்தமன், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்க உள்ளார்.
இன்ஜினியரிங்கில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள பாடப்பிரிவுகள் குறித்து, கல்வி ஆலோசகர் ஆர்.அஸ்வின் ஆலோசனை வழங்க உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், இந்தாண்டு எந்த படிப்புக்கு மவுசு, எந்த பாடப்பிரிவுக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது, முக்கிய இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்புகள் எப்படி, சிறந்த கல்லுாரியை தேர்வு செய்வது எப்படி என்பது உள்ளிட்ட விபரங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். நிகழ்ச்சியில் பங்கேற்க கட்டணம் இல்லை.
இந்த செய்தியில் இணைக்கப்பட்டுள்ள, கியூ.ஆர்., குறியீட்டை, ஸ்கேன் செய்து, அதில் இணைக்கப்பட்ட பக்கத்தில் மாணவர்களின் பெயர், மொபைல் போன் எண், முகவரியை குறிப்பிட்டு முன்பதிவு செய்யலாம்.
மேலும், https://forms.gle/gCMdG14jGpsHE8mV9 என்ற இணையதள இணைப்பில் முன்பதிவு செய்யலாம். மாணவர்கள் பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.