'தினமலர்' பட்டம் வினாடி வினா போட்டி எஸ்.வி.ஜி.வி., பள்ளி மாணவர்கள்
'தினமலர்' பட்டம் வினாடி வினா போட்டி எஸ்.வி.ஜி.வி., பள்ளி மாணவர்கள்
UPDATED : நவ 07, 2026 01:34 PM
ADDED : நவ 07, 2026 01:34 PM
கோவை:
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' எனும் மெகா வினாடி வினா போட்டி, காரமடை, மேட்டுப்பாளையம் எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
மாணவர்களின் சிந்தனையை துாண்டி, வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 'பட்டம்' இதழ் பல்வேறு துறை சார்ந்த தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மாணவர்களின் அறிவுத்திறனை சோதித்து, ஊக்குவிக்கும் வகையில் 2018ம் ஆண்டு முதல் வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட பள்ளிகள் இப்போட்டியில் பங்கேற்றன. பள்ளி அளவிலான சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதிலிருந்து தேர்வாகும் எட்டு அணிகள் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறுகின்றன.
இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, எஸ்.வி.ஜி.வி.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தகுதிச்சுற்று போட்டி நடந்தது. இதில், 92 மாணவர்கள் எழுத்து தேர்வில் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடந்த வாய்மொழி வினாடி வினா சுற்றில், 'எச்' அணியை சேர்ந்த 11ம் வகுப்பு 'ஏ1' பிரிவு மாணவர் யோகித், மற்றும் 11ம் வகுப்பு 'ஏ' பிரிவு மாணவர் விஷ்வேஷ் ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை பள்ளி முதல்வர் சசிகலா வழங்கி பாராட்டினார். இப்போட்டிக்கு சத்யா ஏஜென்சிஸ் இணை ஆதரவாளராகவும், ஸ்போர்ட்ஸ் ஹப் பரிசு பொருட்கள் வழங்கும் நிறுவனமாகவும் இணைந்துள்ளன.
