செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் வெற்றிக்கு வழிகோலும்! 'பட்டம்' வினாடி - வினா போட்டியில் மாணவியர் சாதனை!
செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் வெற்றிக்கு வழிகோலும்! 'பட்டம்' வினாடி - வினா போட்டியில் மாணவியர் சாதனை!
UPDATED : நவ 29, 2026 12:45 PM
ADDED : நவ 29, 2026 12:46 PM
திருப்பூர்:
தினமலர் 'பட்டம்' இதழும், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரியும் இணைந்து நடத்தும் 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி வினா போட்டி, திருப்பூர், காங்கயம் ரோடு, புதுப்பாளையத்தில் உள்ள கொங்கு மெட்ரிகுலேசன் பள்ளியில் நடந்தது.
மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்து, சிந்தனை மற்றும் கற்றல் ஆற்றலை வளர்க்கும் வகையில் 'பட்டம்' இதழ் வெளியாகிறது. அதை தொடர்ந்து வாசிக்கும் மாணவர்களை உற்சாகப்படுத்த வினாடி- வினா போட்டி நடத்தப்படுகிறது. இதில் முன்னேறும் அணிகள் அரையிறுதிக்கு தேர்வாகும்; இறுதிச் சுற்றில் முதலிடம் பெறும் அணிக்குச் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த, 160-க்கும் அதிகமான பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், தங்களது பொது அறிவுத் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி அளவிலான அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. திருப்பூர் காங்கயம் ரோடு, புதுப்பாளையம் கொங்கு மெட்ரிகுலேசன் பள்ளியில் நடந்த போட்டியில், 147 மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். முதல் சுற்றில் அதிக மதிப்பெண் எடுத்த, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில், 9ம் வகுப்பு மாணவிகள் சிவரஞ்சனி மற்றும் சஞ்சனா ஆகியோர் முதலிடம் பெற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி தாளாளர் சந்திரசேகர் பதக்கம் வழங்கினார். மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கும் ஸ்பான்சர்களாக சத்யா ஏஜென்சீஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹப் இணைந்துள்ளன.
வாசிக்கும் ஆர்வம் அதிகரித்தது! - சிவரஞ்சனி, மாணவி
தினமலர் 'பட்டம்' இதழை படிப்பதால் பொது அறிவு வளர்கிறது; அதிலுள்ள கதைகள் பயனுள்ளதாக இருக்கிறது. இது எனது வாசிப்பு ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. 'பட்டம்' வினாடி-வினா போட்டியில் பங்கேற்றதன் வாயிலாக, தினமும் செய்தித்தாள் வாசிக்க வேண்டும். அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இதழிலில் இடம்பெற ஆசை - சஞ்சனா, மாணவி
'பட்டம்' இதழை படிப்பதால், நமக்கு தெரியாத பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது. பட்டம் இதழ் மற்றும் செய்தித்தாள்களில் பல சாதனையாளர்களின் புகைப்படங்கள், அவர்களின் சாதனைகளை பார்க்கும்போது, எனது சாதனையும் இதுபோல 'பட்டம்' இதழில் இடம்பெற வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது.
வாழ்வியல் கருத்துகள் ஏராளம்! - சந்திரசேகர், பள்ளி தாளாளர்
'பட்டம்' இதழால் மாணவ மாணவியரின் அறிவாற்றல் பெருகுகிறது. அவர்களின் வாசிப்புத் திறன் மேம்படுவதோடு, அதில் இடம்பெறும் பல புதுமையான விஷயங்களையும் கற்றுக்கொள்கின்றனர். தங்களின் வாழ்க்கைக்கும் கல்விக்கும் தேவையான விஷயங்களை தமிழில் நன்றாக படித்து, தங்களின் வாசிப்பு திறனை வளர்த்துக்கொள்கின்றனர்.
