UPDATED : நவ 02, 2026 05:56 PM
ADDED : நவ 02, 2026 05:58 PM
திருப்பூர்:
பள்ளி மாணவ, மாணவியரின் வாசிப்பு ஆர்வத்தை துாண்டவும், புத்தகங்களை கடந்து அறிவை கூர்தீட்டி வளர்த்துக் கொள்வதை ஊக்குவிக்கவும், 'தினமலர்' நாளிதழின் 'பட்டம்' இதழும், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரியும் இணைந்து, 'பதில் சொல்; பரிசை வெல்' மெகா வினாடி வினா போட்டியை நடத்தி வருகிறது.
கோவை, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 160 க்கும் மேற்பட்ட பள்ளிகள், மாணவ, மாணவியர் பங்கேற்று, அசத்தி வருகின்றனர். அவ்கையில், திருப்பூர், பல்லடம் ரோடு, சேடபாளையம், யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பதில்சொல் பரிசை வெல் மெகா வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. பள்ளியின், 151 மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் எடுத்த, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர்.
மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில், 'ஏ' அணியை சேர்ந்த, ஒன்பதாம் வகுப்பு மாணவி சாய்நிவர்த்திக்கா, பிளஸ் 2 மாணவர் திவ்யேஷ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பள்ளி தாளாளர் சாவித்திரி ராஜகோபால், செயலாளர் வினோதரணி ராஜகோபால், முதல்வர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி, பாராட்டினர். சத்யா ஏஜென்சீஸ், ஸ்போர்ட்ஸ் ஹப் நிறுவனங்கள் பரிசு பொருட்கள் வழங்குகின்றன.
உலக செய்தி அறியலாம்
தினமலர் பட்டம் நாளிதழ் நடத்தும் வினாடி வினா குழந்தைகளுக்கு மிகப்பெரிய பயிற்சியாக உள்ளது. அவர்களுக்குள் ஒருகுழுவை ஏற்படுத்தி அறிவுத்தேடலை துவக்குகின்றனர். படிப்பை தாண்டி போட்டித் தேர்வுக்கு போல் தயாராகுகின்றனர். உலக செய்திகள், அறிவியலை அறிந்து கொள்கின்றனர். எதிர்காலத்துக்கு பெரிதும் பயன்படும்.
- சாவித்திரி ராஜகோபால், பள்ளி தாளாளர்.
பொது அறிவு வளரும்
பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், புதுமையான நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் உதவியாக இருந்தது. ஒவ்வொரு கேள்வியும் அதிகளவில் நினைவில் வைத்துக் கொள்ளும் விதமாக சுவராஸ்யமாக இருந்தது.
- மாணவர் திவ்யேஷ்.
படிக்க ஆர்வம்
ஒவ்வொரு விஷயத்தை புதுமையாக படிப்பதில் ஆர்வம் அதிகமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு அறிய விஷயத்தை செய்தித்தாள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிந்தது. கேள்வி என்ன என்பதை எதிர்பார்த்து ஆர்வமுடன் தயாராகினோம்.
- மாணவி சாய் நிவர்த்திகா.
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன், ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி, சத்யா ஏஜென்சி நிறுவனம் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஹப் இணைந்து வழங்கும் 'பட்டம் 2026 - 2027' வினாடி வினா போட்டி, திருப்பூர், பல்லடம் ரோடு, சேடர்பாளையம், யுனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
