நேரடி கடிதம் அனுப்பக்கூடாது; கல்லுாரி முதல்வர்களுக்கு செக்
நேரடி கடிதம் அனுப்பக்கூடாது; கல்லுாரி முதல்வர்களுக்கு செக்
UPDATED : மே 29, 2025 12:00 AM
ADDED : மே 29, 2025 03:35 PM

கோவை:
தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு செயலர்களுக்கு கல்லுாரி முதல்வர்கள் நேரடியாக கடிதம் அனுப்பக்கூடாது என, கல்லுாரி கல்வி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இதற்கு அரசு கல்லுாரி முதல்வர்கள் வட்டாரத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தமிழகத்தில், 171 அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. கல்லுாரிகளின் தேவைகள் குறித்து, துறை அமைச்சர் மற்றும் செயலர்களுக்கு கல்லுாரி முதல்வர்கள் பலரும் கடிதம் அனுப்புகின்றனர்.
இனி அவ்வாறு கடிதம் அனுப்பக்கூடாது. நேரடியாக கடிதங்கள் அனுப்புவது அலுவலக நடைமுறைக்கு முரணானது. கோரிக்கை கடிதங்களை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குநர்கள் வாயிலாக கமிஷனருக்கு அனுப்ப வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லுாரி கல்வி கமிஷனர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு கல்லுாரி முதல்வர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் எங்கள் கோரிக்கை அவர்களுக்கு பாதகமாக இருக்கும் பட்சத்தில், மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து மிரட்டல்கள் வர வாய்ப்புள்ளது. குறிப்பாக, பெண் முதல்வர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றனர்.