உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் மாற்றுத்திறனாளிகள் கடும் அதிருப்தி
உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் மாற்றுத்திறனாளிகள் கடும் அதிருப்தி
UPDATED : பிப் 20, 2025 12:00 AM
ADDED : பிப் 20, 2025 10:49 AM
சென்னை:
மாற்றுத்திறனாளி பாதுகாவலருக்கு வழங்கப்படும், மாதாந்திர உதவித்தொகை பெற விண்ணப்பித்த, 1,500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, ஓராண்டுக்கு மேலாகியும், உதவித் தொகை வழங்கப்படாமல் இருப்பது, அவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சிலர் கூறியதாவது:
தமிழக அரசு, கடும் ஊனத்தினால் பாதிக்கப்பட்டு, மற்றவர்களின் துணையின்றி செயல்பட இயலாத, மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலருக்கு, மாதம் 1,000 ரூபாய், உதவித்தொகை வழங்கி வருகிறது.
இதை பெற விண்ணப்பித்த, 1,500க்கும் மேற்பட்டோருக்கு, கடந்த ஓராண்டாக உதவித் தொகை வழங்காமல், அரசு அலைக்கழித்து வருகிறது. இது வேதனையை தருகிறது.
பாதுகாவலர் உதவித்தொகை வேண்டி, விண்ணப்பித்து காத்திருப்போருக்கு, சில மாவட்டங்களில், மருத்துவப் பரிசோதனை கூட நடத்தப்படாமல் இருப்பது, அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது.
மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்ட மாவட்டங்களிலும், தேர்வானவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது. இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, 'இத்திட்டத்தில், குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும், உதவித்தொகை வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது' என, கூறுகின்றனர்.
எனவே, தமிழக அரசு, இலக்கு நிர்ணயமின்றி பாதிக்கப்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளின் பாதுகாவலருக்கும், உதவித்தொகை வழங்கும் வகையில், திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.