UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM
ADDED : ஜூலை 04, 2024 03:49 PM

சென்னை:
பல்வேறு துறைகளுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளின் நிலை மற்றும் அதன் முடிவுகள் தாமதமாவதற்கான பட்டியலை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. ஐந்து தேர்வு முடிவுகள், நீதிமன்ற வழக்கால் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை, அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. இந்த தேர்வுகளின் அறிவிக்கை, தேர்வு முடிவுகள் ஆகியன குறித்து உத்தேச அட்டவணை ஆண்டின் துவக்கத்தில் வெளியிடும்.
இந்த அட்டவணைப்படி, பல தேர்வுகள் நடத்தப்படுவதில்லை; முடிவு வெளியிடுவதும் தாமதமாகும். இந்நிலையில் 13 தேர்வுகளின் தற்போதைய நிலை குறித்த பட்டியலை, தேர்வர்களின் பார்வைக்காக https://tnpsc.gov.in/Home.aspx என்ற இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
இதில் வேளாண் உதவி இயக்குனர், சாலை ஆய்வாளர், மீன்வள சார் - ஆய்வாளர், குரூப் 1சி பதவிக்கான பிரதான தேர்வு, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகிய பதவிகளுக்கான, ஐந்து தேர்வுகளின் முடிவுகள், நீதிமன்ற வழக்குகளின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.