அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா 42 போட்டிகளை நீக்கியதால் அதிருப்தி
அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா 42 போட்டிகளை நீக்கியதால் அதிருப்தி
UPDATED : ஆக 28, 2024 12:00 AM
ADDED : ஆக 28, 2024 08:59 AM
பொள்ளாச்சி:
அரசு பள்ளிகளில், 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, கலைத் திருவிழா போட்டி நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு, 42 போட்டிகள் நீக்கப்பட்டு உள்ளன.
மாணவர்களின் கலைத் திறனை வெளிப்படுத்த, கடந்த இரு ஆண்டுகளாக, அரசுப் பள்ளிகளில், கலைத்திருவிழா போட்டி நடத்தப்படுகிறது. வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு, வெற்றி பெறுவோருக்கு கலையரசன், கலையரசி பட்டம் வழங்கி, விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. அவ்வகையில், 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, 72 வகை போட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில், 30 போட்டிகளாக குறைக்கப்பட்டுள்ளன.
இதில், ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், இசை, நடனம், நாடகம், கருவி இசை, கவின் கலைகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அதேநேரம், மாணவர்கள் எளிதாக பங்கேற்ககூடிய, பேச்சு போட்டி, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல், மாடர்ன் ஆர்ட் உள்ளிட்ட, 42 போட்டிகள் இடம்பெறவில்லை. இது, மாணவ, மாணவியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழ், ஆங்கிலம் மொழிகளில், எழுத்து மற்றும் வாசிப்பை மேம்படுத்தும் வகையில், பேச்சு, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் அமைகின்றன. ஆனால், நடப்பு கல்வியாண்டில் இப்போட்டிகள் இடம்பெறவில்லை. பெரும்பாலான மாணவர்கள், இப்போட்டிகளில் பங்கேற்கவே ஆர்வம் காட்டுவர்.
இப்போட்டிகளில் வெற்றி பெற நினைத்த மாணவ, மாணவியர் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றனர்.

