பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு வாரத்துக்கு முன் முட்டைகள் வினியோகம்; அழுகும் அச்சத்தால் ஆசிரியர்கள் தவிப்பு
பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு வாரத்துக்கு முன் முட்டைகள் வினியோகம்; அழுகும் அச்சத்தால் ஆசிரியர்கள் தவிப்பு
UPDATED : நவ 02, 2024 12:00 AM
ADDED : நவ 02, 2024 10:39 AM
சிவகங்கை:
பள்ளி, அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே முட்டைகளை இறக்குவதால் அழுகி விடும் அச்சத்தால் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் அங்கன்வாடி மையம், பள்ளி சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டைகள் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாட்களும், அங்கன்வாடி மையங்களில் 3 நாட்களும் முட்டைகள் வழங்கப்படுகிறது.
முட்டைகள் வினியோகிக்கும் வாடகை வாகன ஒப்பந்ததாரர்களுக்கு வாரத்தில் திங்கள் தோறும் முட்டைகளை பள்ளி, அங்கன்வாடி மையங்களில் இறக்கி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் நவ., 4 க்கு பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு வினியோகிக்க வேண்டிய முட்டைகளை அக்.29ம் தேதியே (ஒரு வாரத்திற்கு முன்பே) வினியோகம் செய்து விட்டனர். இம்முட்டைகள் அழுகிவிடும் அச்சத்தில் ஆசிரியர்கள், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள் தவித்து வருகின்றனர்.
எந்தவித பாதுகாப்பு வசதியில்லாத பள்ளி, அங்கன்வாடி மையங்களில் எப்படி முட்டைகளை பாதுகாப்பாக வைக்க முடியும். மாணவர்களுக்கு வழங்கும் போது முட்டைகள் அழுகியோ, கெட்டு போயோ ஒவ்வாமை ஏற்பட்டால் யார் பொறுப்பு என ஆசிரியர்கள் புலம்பி வருகின்றனர். எனவே வாரத்தில் முதல் நாள் திங்கள் தோறும் பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு வாரத்திற்கான முட்டைகளை சப்ளை செய்ய வேண்டும்.
மேலும் ஏற்கனவே திங்கள் முதல் வெள்ளி வரை வழங்க வேண்டிய முட்டைகளை கிழமைக்கு ஏற்ப கலர் அடித்து தருவர். தற்போது அப்படி வழங்குவதில்லை எனவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்கூட்டியே வழங்க தடை
சிவகங்கை கலெக்டர் பி.ஏ.,( சத்துணவு) ரவி கூறுகையில், அந்தந்த வாரத்திற்கான முட்டைகளை திங்கள் தோறும் வழங்க தான் வாடகை வாகன ஒப்பந்ததாரர்களுக்கு தெரிவித்துள்ளோம். அதற்கு முன் கொடுக்க கூடாது என எச்சரித்துள்ளோம். தற்போது வினியோகித்த முட்டைகளை திரும்ப எடுத்து கொள்ள அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.