UPDATED : நவ 09, 2026 12:37 PM
ADDED : நவ 09, 2026 12:37 PM
உடுமலை:
உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில், தீபாவளி பண்டிகையை மாணவர்கள் கொண்டாடினர்.
உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி முதல்வர் மாலா துவக்கி வைத்தார். மழலையர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர்கள், தீயணைக்கும் முறைகள் குறித்தும், முதலுதவி சிகிச்சைகள் குறித்தும் விளக்கமளித்தனர்.
உடுமலை காந்தி உண்டு, உறைவிட பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு, புத்தாடைகள், இனிப்பு மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டது. ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, செயலர் கார்த்திக்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
* மடத்துக்குளம்: மடத்துக்குளம் ஜே.எஸ்.ஆர் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளியில் தீபாவளி சந்தை நடந்தது. மழலையர் குழந்தைகள் விற்பனையாளர்களாகவும், பெற்றோர்களும் பிற வகுப்பு மாணவர்களும் வாடிக்கையாளர்களாகவும் பங்கேற்றனர்.
இனிப்புகள், காய்கறிகள், பூக்கள், மண் விளக்குகள், வாழ்த்து அட்டைகள், எழுதுபொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதன் வாயிலாக குழந்தைகள் வாங்குதல், விற்பனை செய்தல். பணத்தைக் கையாளுதல், கணக்கிடுதல், உரையாடுதல் மற்றும் தன்னம்பிக்கை போன்ற வாழ்க்கைத் திறன்களை மகிழ்ச்சியுடன் கற்றுக்கொண்டனர்.
மேலும் நெகிழிப் பைகளைத் தவிர்த்தல், உள்ளூர் வியாபாரிகளை ஆதரித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், விலங்குகளிடம் அன்பு காட்டுதல் மற்றும் பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுதல் போன்ற சமூக விழிப்புணர்வுச் செய்திகளும் வலியுறுத்தப்பட்டன.
