மும்மொழி கொள்கையை வைத்து தி.மு.க., பிரசாரம்; முறியடிக்க தமிழக பா.ஜ., யோசனை
மும்மொழி கொள்கையை வைத்து தி.மு.க., பிரசாரம்; முறியடிக்க தமிழக பா.ஜ., யோசனை
UPDATED : மார் 06, 2025 12:00 AM
ADDED : மார் 06, 2025 08:03 PM
சென்னை:
புதிய கல்வி கொள்கையை ஏற்காததால், தமிழகம் இழக்கும் நிதியை, தமிழக மாணவர்களுக்கு நேரடியாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, மத்திய பா.ஜ., அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய தேசிய கல்வி கொள்கையை உள்ளடக்கிய, பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தா விட்டால், அதற்கான நிதியை வழங்க முடியாது என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது, தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தினால், மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டியிருக்கும். அது ஹிந்தி திணிப்புக்கு வழிவகுக்கும் எனக் கூறி, தி.மு.க., அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என நிர்பந்திக்கக் கூடாது என, அ.தி.மு.க., - பா.ம.க., போன்ற எதிர்க்கட்சிகளும் மத்திய பா.ஜ., அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்த மொழி பிரச்னையை பிரதானமாக முன்னிறுத்தி, வரும் 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க, தி.மு.க., முடிவு செய்துள்ளது. மத்திய பா.ஜ., அரசு ஹிந்தியை திணிப்பதாகக் கூறி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். இது தொடர்பாக, தி.மு.க., தொண்டர்களுக்கு தினமும் ஸ்டாலின் கடிதம் எழுதி வருகிறார்.
ஹிந்தி ஆதிக்க மொழி. அது மாநில மொழிகளை அழித்துவிடும். தி.மு.க.,வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுவதற்கு, மத்திய அரசின் கல்வி கொள்கையே காரணம். மத்திய பா.ஜ., அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்குகிறது என, தன் கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும், மும்மொழி கொள்கைக்கு எதிராக கடிதம் எழுதவும் திட்டமிட்டுள்ளார்.
தி.மு.க.,வின் இந்த மொழி அரசியலை முறியடிப்பது குறித்து, கடந்த பிப்ரவரியில், சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பா.ஜ., தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இது தொடர்பாக, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது:
பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்த மறுப்பதால், அதற்கான நிதியை தமிழகத்திற்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தான், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். ஆனால், அதை வழக்கம் போல திரித்து, கல்விக்கான நிதியையே மத்திய அரசு தர மறுப்பது போல தி.மு.க.,வினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
மாநிலங்களுக்கான நிதியை தர முடியாது என, மத்திய அரசால் சொல்ல முடியாது. அப்படி சொன்னால், மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேட முடியும். ஆனாலும், இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று, தீர்வு தேட தி.மு.க., தரப்புக்கு விருப்பம் இல்லை. அதனாலேயே, இந்த விஷயத்தை சட்ட ரீதியில் அணுகாமல் அமைதி காக்கின்றனர். அதே நேரம், இந்த விஷயத்தை திரித்து அரசியல் ஆதாயம் தேடுவது தான் தி.மு.க.,வின் ஒரே நோக்கம். அதைத்தான் தி.மு.க., செய்து வருகிறது.
இதை முறியடிக்க, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 5,000 கோடி ரூபாய் நிதியை, தமிழக மாணவர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தலாம் அல்லது 'லேப்-டாப்' போன்ற கல்விக்குத் தேவையான உபகரணங்களை வழங்கலாம் என, அமித் ஷாவிடம் யோசனை தெரிவித்துள்ளோம். நல்ல யோசனை எனக் கூறிய அவர், பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.