உடற்கல்வி வகுப்புகளை நிறுத்தக்கூடாது பள்ளி கல்வித்துறை அமைச்சர் கண்டிப்பு
உடற்கல்வி வகுப்புகளை நிறுத்தக்கூடாது பள்ளி கல்வித்துறை அமைச்சர் கண்டிப்பு
UPDATED : ஜூன் 12, 2026 07:16 PM
ADDED : ஜூன் 12, 2026 07:17 PM
கோவை:
கோவை விமான நிலையத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அளித்த பேட்டி:
பகுதி நேர ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கைகளை ஆராய்ந்து, சட்டத்துக்கு உட்பட்டு தீர்வு காண, அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்.
குறைதீர் கூட்டம் நடத்தவும், காலி பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். கிராமங்களுக்கு பஸ் வசதி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கல்வியை உயர்த்துவோம்.
ஒரு வாரத்தில் 40 வகுப்புகளில், 32 வகுப்புகள் கல்விக்காகவும், எட்டு வகுப்புகள் உடற்கல்வி உள்ளிட்ட வேறு வகுப்புகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. நல்ல விளையாட்டு மைதானம் இருந்தால் விளையாட விடுங்கள்; காலி இடங்கள் இருந்தால், விளையாட்டு மைதானமாக மாற்றுங்கள்.
தமிழகத்தில் எந்த ஒரு பள்ளியிலும், உடற்கல்வி வகுப்புகளை நிறுத்தக்கூடாது; எந்த காரணத்திற்காகவும் இந்த வகுப்பை ரத்து செய்யக்கூடாது. ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறும் அளவிற்கு தமிழக மா ணவர்களின் விளையாட்டு தரம் உயரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கோவையில் அரசு பொருட்காட்சியை துவக்கி வைத்த ராஜ்மோகன், “தனியார் பள்ளிகள் உரிமம் மற்றும் புதுப்பித்தலுக்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இடைத்தரகர்கள் வழியாக அங்கீகாரம் புதுப்பித்தல் போன்ற முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை. பள்ளிகள் எந்தவித லஞ்சமும் வழங்க தேவையில்லை,” என்றார்.
விருப்ப மாணவருக்கு விளையாட்டு பயிற்சி பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை:
அனைத்து உடற்கல்வி ஆசிரியர்களும், உடற்கல்வி பாடவேளையில் அதற்கான பாடத்திட்டத்தை பயன்படுத்த வேண்டும். பள்ளி வேலை நேரம் முடிந்த பின், விளையாட்டில் விருப்பம் உள்ள மாணவ மாணவியருக்கு, சிறப்பு விளையாட்டுக்கான பயிற்சி வகுப்பு எடுக்கப்பட வேண்டும்.
அரசு பள்ளிகளில் பயன்படுத்தப்படாத மைதானங்கள் இருப்பின், அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். மாநில, தேசிய அளவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளையாட்டுகளில் சாதனை படைத்த பள்ளி மற்றும் மாணவ மாணவியர் விபரங்களை, முதன்மை உடற்கல்வி ஆய்வாளருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
