UPDATED : அக் 05, 2024 12:00 AM
ADDED : அக் 05, 2024 09:55 AM
சென்னை:
ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என, மருத்துவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது தொடர்பாக, அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு சங்கத் தலைவர் சாமிநாதன், பொதுச்செயலர் ராமலிங்கம் ஆகியோர், அமைச்சர் சுப்பிரமணியனுக்கு எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில், மருத்துவர்கள் உள்ள நிலையில், 24 மணி நேரம் மருத்துவ சேவை செய்ய அழுத்தம் தரப்படுகிறது.
இதனால், மக்களின் உயிருக்கும், மருத்துவர்களின் உடல் நலத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஓய்வில்லாத உழைப்பு, அதிகாரிகளின் அழுத்தத்தால், மருத்துவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
குறைந்தபட்சம் ஏழு டாக்டர்கள் பணியில் இல்லாத, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட மருத்துவமனைகளில், 24 மணி நேர சேவையை அமல்படுத்தக் கூடாது. அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து காலியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். மருத்துவர்களுக்கு ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.