எல்லாருக்கும் எல்லாம் என்பது திராவிட கொள்கை: கல்லுாரி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
எல்லாருக்கும் எல்லாம் என்பது திராவிட கொள்கை: கல்லுாரி விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
UPDATED : ஜூலை 11, 2025 12:00 AM
ADDED : ஜூலை 11, 2025 08:44 AM

திருச்சி:
திருச்சி ஜமால் முகம்மது கல்லுாரியின் பவள விழா கொண்டாடப்பட்டது.
இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்ட கட்டடத்தை திறந்து வைத்து, மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:
கல்லுாரியில் வளரும் நட்பு, அத்தோடு முடிந்து விடாமல், இந்த சமூகத்துக்கு பயனளிக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.தேசத்துக்காக உழைத்த காந்தி, அம்பேத்கர் போன்றவர்களை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். ஒருபோதும் மாணவர்கள் கோட்சே கும்பலின் வழியை பின்பற்ற கூடாது.
எல்லாருக்கும் எல்லாம் என்பது திராவிட கொள்கை. மாணவர்களிடம் என்றும் அழிக்க முடியாத சொத்தாக கல்வி உள்ளது. கல்வி கற்க பொருளாதாரம் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக, தமிழக அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களை மாணவர் சமுதாயத்துக்காக செயல்படுத்தி வருகிறது.
மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க, 20 லட்சம் லேப்டாப் வழங்க உள்ளோம். தற்போது கிடைக்கும் கல்வி எளிதாக கிடைத்தது அல்ல, நம் தலைவர்களின் போராட்டங்களால் கிடைத்தது.
எனவே, மாணவர்கள் அனைவரும் ஓரணியில் தமிழ்நாடு என நின்று, தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.